மூன்று போட்டிகள் கொண்ட இத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ட்ரினிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோதவுள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்னர் மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடியிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் இன்று மோதவுள்ளது.
அந்தவகையில் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேவேளை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்க பொறுப்பேற்று சரியாக ஆறு மாதங்கள் முடிவடையவுள்ள நிலையில் இலங்கை அணியின் முன்னேற்றத்தையும் இத் தொடரின் மூலம் நாம் கண்டுகொள்ளலாம்.
மறுமுனையில் மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய தொடராக இது அமைந்துள்ளது.
அண்மைக் காலங்களில் கடும் பின்னடைவை சந்தித்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொடருக்குக் கூட தகுதிகாண் போட்டியில் விளையாடியே உள்ளே வந்தது.
அத்தோடு அணி நிர்வாகப் பிரச்சினை மற்றும் சம்பளப் பிரச்சினையால் கடும் சிக்கல்களை சந்தித்து வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இத் தொடர் மிக முக்கியமான தொடராகக் கருதப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இரண்டு அணிகளும் தங்கள் பலத்தைப் புதுப்பித்து காட்டவேண்டிய தொடராக இது அமைந்துள்ளதால் பார்வையாளர்களுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.