
2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.