இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த தமிழர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் வசித்து வரும், கமல், அவரது சகோதரர் லோகேஸ், மனைவி கங்கா மற்றும் மகள் சைனி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து இராமேஸ்வரம் வந்த குறித்த நால்வரும் அங்கு விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.
கமலுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, அவுஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரனிடம் செல்வதற்காக வேண்டி, சட்டவிரோதமான படகில் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்படி, இராமேஸ்வரம் வந்து அங்கிருந்து இலங்கை வழியாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.