டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையில் இப்தார் நிகழ்வு வெள்ளை மாளிகையில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த வருடம் அவர் இந்த இப்தார் நிகழ்வை நடத்துவதை வாபஸ் பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் அந்நிகழ்வை நடத்த முன் வந்திருந்தமை அமெரிக்கா வாழ் முஸ்லிம் மக்கள் சமூகத்தினர் மத்தியில் வியப்பைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள முஸ்லிம் சமூகத்தினரையும் அங்கீகரித்து ஐக்கியத்துக்கான செய்தியொன்றை முன்வைத்தார்.
“நாம் இன்றைய மாலை வேளையில் உலகின் மாபெரும் மதங்களில் ஒன்றின் புனித பாரம்பரியத்தைக் கௌரவப்படுத்த ஒன்றுகூடியுள்ளோம்” என அவர் கூறினார்.
மேற்படி நிகழ்வில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சவூதி அரேபியா, குவைத், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உட்பட முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் உள்ளடங்கலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசார காலகட்டத்தில் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதன்போது போரால் பாதிக்கப்பட்டு தாய்நாட்டிலிருந்து வெளியேறி வரும் சிரிய பிரஜைகளை உயிராபத்து விளைவிக்கக் கூடிய பாம்பொன்று எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாம் அமெரிக்கர்களை வெறுப்பதாக தான் கருதுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வாழும் முஸ்லிம்களை அங்கீகரித்து ஐக்கியத்திற்கு வலியுறுத்தியமை பலரையும் வியப்பில் விழி உயர்த்த வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்தியகிழக்கு எங்கிலுமுள்ள பெறுமதிமிக்க பங்காளர்களுடனான அமெரிக்காவின் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கான புதுப்பிக்கப்பட்ட பிணைப்புகள் என்பன குறித்து ட்ரம்ப் இதன்போது விபரித்தார்.
“இப்தார் நிகழ்வானது குடும்பங்களையும் நண்பர்களையும் ஒன்றிணைத்து சமாதானம், தெளிவு மற்றும் அன்புக்கான காலத்தால் வரையறுக்கப்படாத உன்னத செய்தியை கொண்டாடுவதாகவுள்ளது” என அவர் கூறினார்.
“நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே எம் அனைவருக்குமான எதிர்கால பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை அடைய முடியும்” என ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சில நாடுகளுக்கு எதிராக ட்ரம்பால் முன்வைக்கப்பட்டுள்ள பயணத் தடை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையிலேயே இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தத் தீர்ப்பு இந்த மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள அநேக முஸ்லிம் குடியியல் உரிமைக் குழுக் கள் டொனால்ட் ட்ரம்பின் இந்த இப்தார் நிகழ்வை பகிஷ்கரிப்பு செய்து வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
ட்ரம்பின் சினமூட்டும் கருத்துகள் அமெ ரிக்க முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கும் பார பட்சத்திற்குள்ளாக்கப்படுவதற்கும் வழி வகை செய்வனவாக உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.