மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் எதிர் வரும் திங்கட்கிழமை காலை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த அகழ்வு பணிகள் 10ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வந்தன.
தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகளின் போது மனித எலும்புகள், மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 10ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.