இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா என்மீது தேவையற்றதும் பொய்யானதுமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் :நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்

196

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தன்மீது தேவையற்றதும் பொய்யானதுமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மக்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் வகையிலேயே புல்லுமலை பகுதியில் குடிநீர் போத்தல் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுவருகின்றது.

போலியான கருத்துகளை அமைச்சர் ஹிஸ்புல்லா பத்திரிகை அறிக்கைகள் மூலம் வெளியிட்டுவருகின்றார்.

புல்லுமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மக்கள் செய்த ஆர்ப்பாட்டம் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் எனக்கு விடுத்த அழைப்புக்கு ஏற்பவே நான் அந்த இடத்திற்கு சென்றேன்.

மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதே மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களின் கடமை அதனை அமைச்சர் ஹிஸ்புல்லா விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.

அந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் அதில் 25க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டதாக பொய்யான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அவரின் கருத்துகள் தொடர்பில் வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE