தமிழர்களின் மனதில் உயர்ந்து நிற்கும் இராணுவ அதிகாரி அப்பகுதி மக்களுக்கு இதுவரைகாலமும் செய்து வந்த சேவைகள்

193

விஸ்வமடு இராணுவ முகாமில் இருந்து அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள இராணுவ அதிகாரி கேர்ணல் பந்து இரத்னபிரியவை தமிழ் மக்கள் கண்ணீரோடு வழியனுப்பியமை தற்போது வடக்கு, கிழக்கு உட்பட தென்னிலங்கை மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த இராணுவ அதிகாரியின் மீது அளவற்ற அன்பினை அப்பகுதி தமிழ் மக்கள் வைத்திருப்பதற்கு காரணம் என்ன? கண்ணீரோடு வழியனுப்ப காரணம் என்ன என்பது தொடர்பில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இராணுவ அதிகாரி அப்பகுதி மக்களுக்கு இதுவரைகாலமும் செய்து வந்த சேவைகள் அளப்பரியது என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 30 வருட காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாடம் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்துவதற்கே தத்தளித்துக்கொண்டிருந்த 3000இற்கும் மேற்பட்ட வடமாகாண மக்களிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளார் இந்த இராணுவ அதிகாரி.

இதன்காரணமாக துயருற்ற அந்த குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுத்தந்துள்ளதோடு, அவர்களது வாழ்வாதாரத்தையும் உறுதி செய்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, அங்கங்களை இழந்து, தம்முடைய எதிர்கால வாழ்க்கைத் தொடர்பில் நம்பிக்கையிழந்து இருந்தவர்களுக்கும் தொழில் பெற்றுக்கொடுத்துள்ளார்.

வலயக்கல்வி பணிமனையின் கீழ் மாதாந்தம் ஒரு சிறிய தொகை வேதனம் பெற்றுவந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்கான போதிய வருமானத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளதுடன், முன்பள்ளிகளின் கல்வி, கட்டடம், தளபாடம் என்பவற்றின் தரங்களையும் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அப்பகுதி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் ஆரம்பகல்வி முதல் சாதாரண தரம் வரை கற்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்காக கல்வி நிலையங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அங்கிருக்கும் மக்களை அவரவர் இயலுமைக்கேற்ப விவசாயம், கைப்பணி, தையல், மேசன் வேலை, தச்சு வேலை போன்ற மேலும் பல துறைகளில் நெறிப்படுத்தியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், கோவில்கள் மற்றும் பல பொது இடங்களை புணரமைத்து கொடுத்துள்ளார்.

அப்பகுதி மாணவர்களின் திறமைகளுக்கு களம் கொடுக்கும் வகையில், நடன அணி, நாடக அணி, கராத்தே அணி, இசைப்பயிற்சி போன்ற கற்கைகளை கற்பதற்கு வழிசெய்துள்ளதுடன், திறனுள்ள பலநூறு மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க வழிசமைத்து கொடுத்துள்ளார்.

அத்துடன் தனது கடமைகளுக்கு அப்பால் பொதுமக்களுடன் நல்ல உறவுகளைப் பேணி வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் இணைந்து கொள்ள ஒரு தமிழரேனும் முன்வராத நிலையில், தான் கடும் முயற்சி எடுத்து 20 பணியாளர்களை ஆரம்பத்தில் இணைத்துக்கொண்டு அதன் பிறகு ஊர் ஊராக சென்று மக்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டி 3500இற்கும் மேற்பட்டவர்களை திணைக்களத்தில் இணைத்து கொண்டுள்ளார்.

அரசியல் நெருக்கடிகள், நிர்வாக சிக்கல்கள் என பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமிழர்களை அன்புடன் ஆதரித்து தனது சேவைகளை மேற்கொண்டவர் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவர்களின் நிலையறிந்து உதவிகள் பல செய்துள்ளதுடன், தாயாய், தந்தையாய், அண்ணனாய், நண்பனாய் அனைவரது மனங்களிலும் உயர்ந்து விட்டார் என குறிப்பிடுகின்றனர்.

மேலும், 30 வருட காலமாக யுத்தத்தினால் நாம் வேறுபட்டு இருந்தும் எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை அன்போடு அரவணைத்த உள்ளம் பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது என கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

SHARE