உன்னிச்சையில் இருந்து பெறப்படும் குடிநீரை அப்பிரதேச மக்களுக்கும் வழங்குங்கள்

197

(பாராளுமன்றத்தில் ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு)

உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதிலும், அவர்களது கிராமத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை அவர்களுக்கும் வழங்க முடியாத கையாலாகாத நிலையில் இந்த நல்லாட்சி அரசு உள்ளதா என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 08ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதமொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை உன்னிச்சைப் பிரதேச மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது. உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற போதிலும், குளத்தில் இருந்து குறுகிய தூரத்தில் இருக்கும் உன்னிச்சை, ஆயித்தியமலை, மணிபுரம், நெல்லிக்காடு, மகிழவெட்டுவான், பாவற்கொடிச்சேனை, பன்சேனை, கரடியனாறு, மரப்பாலம், இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான், கொடுவாமடு போன்ற நீரின்றி வாடும் பல பிரதேசங்களுக்கு வழங்கப்படவில்லை. பாரபட்சமாக பல கிலோமீட்டர்கள் தாண்டி சில குறிப்பிட்ட நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

இது தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சருடன் பல தடவைகள் பேசியும், பாராளுமன்றில் பலமுறை தெரிவித்தும் இதுவரையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதியில் வாழும் 80 வீதத்திற்கும் அதிகமானோர் மாசடைந்த குடிநீரையே பருகுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்ற போதிலும், அவர்களது கிராமத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை அவர்களுக்கு வழங்க முடியாத கையாலாகாத நிலையில் இந்த நல்லாட்சி அரசு உள்ளதா என கேட்கத் தோன்றுகின்றது என்று அவர் தெரிவித்தார்.

இதனைச் செவிமடுத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இவ்விடயத்தினை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE