மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சம்பவம் நடைபெற்ற நடுத்தெருவிலேயே நீதி சொல்லிவிட்டார்
அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஒருமையில் பேசுகின்றார். நீதி சொல்லும் ஒரு நீதிபதியின் இப்படியான மிரட்டும் பாணியிலான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அத்தோடு இவர் காவல்துறையை நியாயப்படுத்த முயல்வது அப்பட்டமாக புலப்படுகிறது.
நீதிபதி ஐயா. இரு குழுக்களுக்குள் மோதல் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போது அந்த வழியால் தற்செயலாய் வந்த காவல்துறை இலங்கையின் எந்த சட்டக்கோவையின் எந்த சரத்தின் அடிப்படையில் சட்டத்தை தன் கையில் எடுத்து ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றலாம்?
பாதிக்கபட்ட மக்களை, கோபத்தின் விழிம்பில் இருக்கும் மக்களை நோக்கி நீங்கள் மிரட்டுவது போல் ஒருமையில் நீ… வா… போ… என்று குறிப்பிடுவது சரியான ஒரு அதிகாரத்தில் இருக்கும் உங்களுக்கு அழகா?
கோவிலில் நின்ற மக்களின் கண்கண்ட சாட்சியங்களின் படி; இறந்த இளைஞனுக்கும் மோதல் சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சுடப்பட்ட நபர் காவல்துறையை தாக்க முயற்சிக்கவில்லை. கோவிலின் உள்ளே பூசையில் நின்றுவிட்டு வெளியில் வந்து தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு நபரை காப்பாற்ற முனைந்திருக்கிறார். சாதாரண உடையில் வந்த காவலர் மிக அருகில் வந்து நான்கு தரம் முதுகில் சுட்டிருக்கிறார்.
சுட்டுவிட்டு “நான் தான் சுட்டேன்” என்று தைரியமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
மேற்குறிப்பிட்ட தகவல்களை கோயிலில் பூசையில் கலந்துகொண்ட மக்கள் நேரடியாக IBC ஊடகத்துக்கு தெரிவித்தார்கள்.
நீதி வேண்டி அந்த மக்கள் வீதி மறியல் போராட்டம் செய்கிறார்கள்.சம்பவ இடத்துக்கு வந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி திரு.ஜூட்சன் அவர்கள் நடந்துகொண்ட விதமும் பேசிய விதமும் ஏற்புடையதல்ல.
பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு நடுறோட்டில் நிண்டு அந்த மக்களுக்கு எதிராய் தீர்ப்பு எழுதுவது எந்த வகையில் நியாயமானது?
அவரது முழுக்கவனமும் வீதி மறியல் செய்யும் மக்களை கலைத்துவிடுவதிலேயே நிக்கிறது.
(காணொளியில் மிகத்தெளிவாய் தெரிகிறது)
மக்கள் தரப்பு நியாயங்களை அல்லது கண்கண்ட சாட்சியங்களின் கருத்துக்களை செவிமடுப்பதாய் தெரியவில்லை.
“பொலிசை தாக்கவந்தவரைத்தான் சுட்டார்கள்” என்று திரும்ப திரும்ப நீதவான் ஜூட்சன் சொல்கிறார்.
“சுட்டுக்கொல்ல எந்த சட்டம் சொன்னது? காலுக்கு கீழ சுட ஏலாதோ?” என்று கேட்கும் ஒரு பொதுமகனின் கேள்விக்கு நீதிபதியிடம் பதில் இல்லை.
சுடப்பட்ட குண்டுகளின் நான்கு வெற்றுத்தோட்டாக்களில் மூன்றை மக்கள் எடுத்துவைத்திருக்கிறார்கள்.
ஒன்றை பொலிசார் எடுத்துவிட்டார்கள்.
“என்னத்துக்கு அதுகளையெல்லாம் நீங்கள் எடுத்தனியள்?” எண்டு நீதவான் திரு.ஜூட்சன் கேட்கிறார்.
சுட்டது பொலிஸ்!
அவங்களே ஆதாரங்களை எடுத்து ஒழிக்கமுதல் மக்கள் அதை எடுத்து வைப்பதில் என்ன பிழை?
வாக்குமூலம் சொல்லும் ஒரு பொடியனைப்பார்த்து நீதவான் ஜூட்சன் அவர்கள் “ஏய் உன்னிட்ட கதை கேக்கயில்லை நான்” எண்டு மிரட்டும் பாணியில் மரியாதைக்குறைவாய் பேசுகிறார்.
அடுத்த ஒரு சில நிமிடத்தில் இன்னுமொருவரைப்பார்த்து “மரியாதையா கதைக்கப்பழகு நீ” என்கிறார்.
(காணொளியைப்பார்க்கவும்)
நீதவான் ஜூட்சனின் வீட்டுக்கு போய் வந்த பொலிஸ்தான் சுட்டிருக்கிறார் என்பதை அவரே தன் வாயால் ஒத்துக்கொள்கிறார்.
அதை நிதவான் ஜூட்சன் திரும்ப திரும்ப நியாயப்படுத்துகிறார்.காலக்கொடுமை!
பொலிசாருக்கு சார்பாய் நீதிபதி திரு. ஜூட்சன் பேசிக்கொண்டேயிருக்கிறார். மேலும்;
சம்பவ இடத்துக்கு வந்தால் விபரங்களை கேட்டறிவது நீதிபதியின் கடமை.
யார் பிழை? யார் சரி ? என்பதை விசாரணை முடியமுன்னரே முற்கூட்டியே முடிவெடுப்பது என்ன நீதி?
ஒரு நீதிபதி என்பவர் சம்பவ இடத்தில் பதட்டமான சூழ்நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட பொலிசை நியாயப்படுத்தி பேசுவது சட்டத்துக்கு முரணான செயல். இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்துக்கு போனால் நீதிபதி திரு. ஜூட்சன் எழுதப்போகும் தீர்ப்பு ஏற்கனவே தெரிந்துவிட்டது.
பல்கலைக்கழக மாணவர்களை பொலிசார் சுட்ட சம்பவத்தை எப்படி அடிச்சு மூடி குப்பையில தூக்கி எறிந்தார்களோ அதேபோல இதுவும் மூடப்படும்.யாழ்ப்பாணத்தில் நேர்மையான ஒரு தமிழ் நீதவான் இருந்தால் நிச்சயம் பல குற்றச்செயல்கள் குறையும்.
நியாயமும் நேர்மையும் உறுதியும் இல்லாத நீதவான்கள் இல்லாத யாழ்ப்பாண சமூகம் குற்றங்களாலும் அரச பயங்கரவாதத்தாலும் அழிந்துகொண்டிருக்கிறது.