சங்க சபையின் அனுமதியின்றி ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமைக்கு, கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதியமைச்சுக்கு சங்க சபை கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அக் கடிதத்தில்,
ஞானசார தேரருக்கு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டபோதும், அவரது துறவற உடையை அகற்றுவது குறித்தான உத்தரவு வழங்கப்படவில்லை.
விருப்பத்திற்கு மாறாக, காவி உடையை அகற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு அவரை சிறையில் வைப்பதன் மூலம், அவர் துறவறத்தை கடைப்பிடிப்பது தொடர்பான ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம்.
இலங்கையில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, பௌத்த தேரர் ஒருவரை அவரது துறவற நிலையிலிருந்து அவரை தாழ்த்தி, துறவற ஆடையை நீக்கும் அதிகாரம், அவருக்குரிய சங்க சபைக்கு உட்பட்டதாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என அச்சபையின் பிரதான பதிவாளர் பேராசிரியர் கோட்டபிட்டியே ராஹுல தேரரின் கையொப்பத்துடனான கடிதமொன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.