(அஸ்லம் எஸ்.மௌலானா)

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரெனெ வீசிய மினி சூறாவளியினால் கல்முனை மாநகர பிரதேசங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் சில பாடசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை இன்று திங்கட்கிழமை பார்வையிட்ட கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தூஷித்த வணசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் நிலைமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதன்போது வீடுகள் பாதிக்கப்பட்டு நிர்க்கத்தியடைந்துள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வீடுகள் புனரமைப்புக்கு அவசரமாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இவற்றுக்கு இணக்கம் தெரிவித்த அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக பத்தாயிரம் ரூபா உதவித் தொகையையும் உலர் உணவையும் வழங்க பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்குவதாகவும் பாதிக்கப்பட்ட வீடுகளின் சேத மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நஷ்டஈட்டுத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிற விடயங்கள் குறித்து ஏனைய திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாநகர முதல்வர் றகீப் தெரிவித்தார்.
