அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகள் 5 பேர் பலி: எல்லை ரோந்து படையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது கார் விபத்து

174
அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகள் 5 பேர் பலி: எல்லை ரோந்து படையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது கார் விபத்து
.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 5 பேர், எல்லை ரோந்து படையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது கார் விபத்தில் சிக்கி பலியாகினர்.
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து பலர் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் குடியேறுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது. இதனால் அமெரிக்காவில் மெக்சிகோவை ஒட்டி உள்ள பகுதிகளில் ரோந்து படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் மெக்சிகோ எல்லையை ஒட்டி உள்ள சான் அன்டோனியோ நகரில் நேற்று முன்தினம் எல்லை ரோந்து படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 3 கார்கள் வேகமாக வந்தன. அவற்றில் சட்டவிரோத குடியேறிகள் இருக்கக்கூடும் என சந்தேகித்த எல்லை ரோந்து படையினர் அந்த கார்களை தடுத்து நிறுத்தினர். அவற்றில் 2 கார்கள் மட்டும் நின்றன. மற்றொரு கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே ரோந்து படையினர் தங்களுடைய காரில் அந்த காரை விரட்டி சென்றனர்.
சட்டவிரோத குடியேறிகள் இருந்த அந்த கார் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சென்றதாக தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த கார் உருக்குலைந்து போனது.
இந்த கோர சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
காரை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
SHARE