பத்து வருடங்களாக இளம் யுவதியை கொடுமைப்படுத்தி, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி, அந்த யுவதியை மீது திராவகம் வீசியதாக கூறப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் காலி அலுவலக பொறியிலாளர் ஒருவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிதான நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அக்குரஸ்ஸ பரதுவ பரகாஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான அசங்க விராஜ் ஏக்கநாயக்க என்ற பொறியியலாளரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது 18 வயதாகும் அந்த யுவதி கொடுமைகளை தாங்கி கொள்ளாது ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தேக நபருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து தப்பிச் சென்று காலி பிராந்திய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி வருணி கேஷலா போகாவத்தவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார்.
இதற்கு அமைய அனுராதபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த யுவதியை அழைத்து வந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த குற்றம் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள் அனுராபுரத்திற்கு சென்று யுவதியை காலிக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டே போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
யுவதி தனது எட்டு வயதில் இருந்து சந்தேக நபருக்கு சொந்தமான சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத்தில் தங்கியிருந்துள்ளார். யுவதியின் தாய் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
ஒரு முறை பஸ் சாரதி ஒருவர் யுவதியின் முகத்தை பார்த்தார் என்பதற்காக சந்தேக நபர் முகத்தில் திராவகத்தை வீசியுள்ளார். அதில் இருந்து தப்பிக்க யுவதி கீழே குனிந்ததால், திராவகம் யுவதியின் முதுகில் பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் மருத்துவர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து காயத்திற்கு சிகிச்சையளித்துள்ளார்.
கொடுமை தாங்காது யுவதி கடந்த வருடம் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். சந்தேக நபர் பத்திரிகையில் பகிரங்க விளம்பரத்தை செய்து பொலிஸாரின் உதவியுடன் யுவதியை அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் யுவதி வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளதுடன் சந்தேக நபர் அது குறித்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். யுவதி வழங்கிய தகவல்களுக்கு அமைய சந்தேக நபரான பொறியியலாளரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.