அக்கரைப்பற்று பிரதேச தமிழர்கள் மத்தியில் சற்று பதற்றமான நிலை

172

ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜாவை விடுதலை செய்யுமாறு வழியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு தமிழர்கள் மத்தியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலரால் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி அபகரிப்பு செய்ய முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கைலப்பினால் ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் இன்றைய கொந்தளிப்பு நிலையானது தவிசாளரின் விடுதலையை நோக்கியதாகவே அமைகின்றது.

இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைந்தளவே காணப்படுகின்றது. அரச அலுவலர்களின் வருகையும் வழமையை விட சற்று குறைந்த வீதமே தென்படுகின்றது. தமிழர் பிரதேசங்களில் அனைத்து வியாபார தளங்களும் பூட்டப்பட்டு காணப்பட்டுள்ளது.

தவிசாளர் பேரின்பராஜாவை நேற்று விசாரணைக்கென அழைத்த அக்கரைபற்று பொலிஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதன் பின்புலத்தில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களப்பு நிலத்தை அத்துமீறி வேலியிட சென்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்த சென்ற பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசசபை பெண் உறுப்பினர்கள் இருவரையும் நேற்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

குறித்த பெரியகளப்பு பகுதியில் தமது காணி என முஸ்லிம் நபர் ஒருவர் களப்பு நிலத்தை திங்கட்கிழமை (18) அத்துமீறி வேலி அடைத்து ஆக்கிரமிக்க முற்பட்ட போது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து களப்பில் நாட்டப்பட்ட வேலிகளை பிடுங்கி எறிந்தனர், இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து நில ஆக்கிரமிப்பாளர் தனது காணியை எல்லையிட்டு வேலியடைக்க முற்பட்டபோது தம்மை தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் நேற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையின் சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சிகளைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்களை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு இருந்தது.

மேலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன். அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் விமலநாதன் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உற்பட அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE