
சிங்கள பௌத்த பேரின மேலாதிக்க சிந்தனையின் தற்காலத் தலைமைக் காப்பாளர்களாக ராஜபக்ஷ குடும்பத்தினர் காட்டப்படுகின்றனர்.
சிங்கள பௌத்த பேரினவாதம் அல்லது மேலாதிக்க தேசியத்திற்கு அல்லது அடிப்படை வாதத்திற்கு எதிராகப் பாரிய அரசியல், பண்பாட்டு சமூக வேலைத்திட்டங்கள் தேவைப்படுகின்றபோதும், சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் ஒரு சில இடதுசாரிகளையும், தாராளவாதிகளையும் தவிர ஏறக்குறைய எல்லோருமே அதனுடன் இணங்கிப் போய் சகஜீவனம் நடத்துபவர்களாகவே இருக்கின்றனர்.
அடக்கப்படுகின்ற தேசிய இனங்களின் (தமிழ், முஸ்லிம், மலையகத்தமிழர்கள்) மத்தியில் தற்காப்பு நிலையிலும், மேலோட்டமான கோபத்தை வெளிக்காட்டும் வகையிலும் பெருந்தேசியவாத அடிப்படைவாதத்திற்கு எதிராக சமூக பண்பாட்டு மட்டத்தில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டாலும், அரசியல் ரீதியாக வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக ஆவேசக் கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையிலே இருக்கிறது.
இதைத்தவிர பெருந்தேசிய அடிப்படை வாதிகளே ஆள்பவர்களாக இருப்பதால் அவர்கள் எவ்வளவு பலமாகத் தாக்கினாலும் அவர்களின் தயவிலேயே அடக்கப்படுகின்ற தேசிய இனங்களை வாழ்வதற்குப் பயிற்றுவிக்கும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்களும் சமயத்தலைவர்களும் இருக்கின்றனர்.
இலங்கையில் தொடரும் தேசிய இன ஒடுக்குமுறை பாகுபாட்டை நீக்க உருப்படியான நடவடிக்கைகளை மைத்திரியோ, ரணிலோ எடுக்கவில்லை.
பரந்தளவில் மக்களின் பொருளாதரச் சுமைகளை குறைக்கவோ வேலைவாய்ப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தல் அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களைப் பாலனம் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தி மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தவோ நடவடிக்கைகளை மைத்திரி ரணில் அரசாங்கம் எடுக்கவில்லை.
பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் விவசாயிகளும் இளைஞர் சமூகமும் பாதிப்படைந்து அதிருப்தி அமைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு ஆட்சி மாற்றம் தேர்தல் பற்றிப் பேசப்படுகிறது.
பெருந்தேசிய அடிப்படைவாதிகளும் அவர்களுக்கு ஒத்தூதும் ஏனைய சமூகத்தலைவர்களும் அரசியலில் ராஜபக்ஷ குடும்பத்தினரை மீண்டும் அமர்த்துவதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
அடுத்து ஆட்சியமைப்பது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவாக இருக்க வேண்டுமென்றும், மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருக்க வேண்டுமென்றும் திடமாக இருப்பதுடன் ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷவாக அல்லது சமல் ராஜபக்ஷாவாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இலங்கையில் நவபழைமைவாதத்தையும், நவபாசிசத்தையும் ஆட்சியில் இருந்த போது நிலைநிறுத்திய மஹிந்த ராஜபக்ஷ 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அதிகார துஷ்பிரயோகம் ஊழல் மோசடிகள் போன்ற சாட்டுதல்களுக்கும் சர்வதேச சக்திகளின் அமுத்தங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்ட போதும், அவர் ஏற்கனவே பலப்படுத்தி இருந்த கருத்தியல் மற்றும் ஸ்தாபன வேலைகளையும் அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த ஜனரஞ்சக வேலை முறைகளால் மீண்டும் அரசியலில் எழுந்து நிற்கிறார்.
இதற்கு மைத்திரி ரணில் அரசாங்கத்தின் இயலாமை ஊழல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான மோதல்களும் போசணை செய்துள்ளது.
அவரின் நவபாசிசத்தினால் அரசிற்கு வெளியில் கட்டப்பட்டுள்ள பாதாள உலகத்தினர் மரபிலா இயக்கம் போன்றனவும் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் படாதபாடுபடுகின்றனர்.
மைத்திரி ரணில் அரசாங்கம் கொண்டுவந்த அரசியல் யாப்பிற்கான 19 வது திருத்தத்தின்படி, ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது.
அதனால் 2020 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது. அதனால் கோதாபய, அல்லது சமல் ராஜபக்ஷவின் பக்கம் கவனம் திரும்பியுள்ளபோதும் கோதாபயவே தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.
அவர் எலிய என்ற ஒரு அமைப்பைக் கட்டி ஜெனிவாத் தீர்மானத்திற்கு எதிராகப் படையினரின் குடும்பங்களையும் பெருந்தேசிய அடிப்படைவாதிகளையும் ஆகர்சித்துள்ளார். அதற்கும் அப்பால் எதிர்காலத்திற்கான தொழில் சார்ந்தவர்கள் புலமைசார்ந்தவர்கள் என்ற அமைப்பை இயக்குகிறார். இலங்கையின் பொருளாதார எதிர்காலம் பற்றி ஒரு மாநாட்டை நடத்தியுள்ளார்.
அவரை முன்மொழிந்தால் அவர் ஜனாதிபதியாகப் போட்டியிடுவார் என்று கோதாபய கூறிவருகிறார். மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பின் கோதாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்தால் தான் போட்டியிடுவதாக கோதாபய மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
கோதபாயவின் நிலைப்பாடு இலங்கை தமிழ் மக்களுக்கு பாதகமாக இருப்பதால் இந்தியா அவரை விரும்பாது. இந்தியாவின் விரும்பமில்லாவிட்டால் அவர் இலங்கைக்கு தலைமை வகிக்க முடியாது என்று தயான் ஜயலதிக்க கூறியுள்ளார்.
இவர் மஹிந்த சிந்தனை புத்திஜீவி என்பது தெரிந்ததே. கோதாவின் போர் பற்றி போற்றி வந்த தயான் இப்போது அவரை விரும்பவில்லை என்பதற்கு அவருக்கே தெரிந்த அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள புத்தி ஜீவிய ஒப்பந்த வேலைகள் தான் காரணமோ தெரியாது.
சிங்கள மக்களின் ஆதரவு, மஹிந்தவின் விருப்பம் என்பவற்றை கோதாபய பெற்றுக் கொண்டாலும் அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளினதும் ஆசீர்வாதம் இருக்காது என்று இலங்கையில் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் தெரிவித்துள்ளார்.
அத்துல் கேஷப் முன்னாள் ஜனதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 10 ஆம் திகதி சந்திந்துள்ளார்.
அவர் ஏன் மஹிந்தவை சந்தித்தார் என்று அரசியல் இராஜதந்திர, ஊடக வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தறுவாயில் மரியாதையின் நிமித்தம் சந்தித்தாகக் கூறியுள்ளார்.
அவ்வாறெனின் அவர் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரையும் சந்தித்திருக்க வேண்டும்.
எனினும் மஹிந்தவை சந்தித்த போது கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு மேற்குலகமும் அமெரிக்காவும் சாதகமான நிலைப்பாட்டை எடுக்காது என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மஹிந்த இன்னும் வாய் திறக்கவில்லை. அத்துல் கேஷப்பும் இன்னும் எதுவும் கூறவில்லை.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நடத்தியகாலத்திலும் யுத்த பின்காலத்திலும் அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, சீன தூதுவர்களின் செயற்பாடுகள் வெளிவெளியாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக அமைந்துள்ளன.
அவை ராஜதந்திர வரண்முறைகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றை மீறும்வகையில் அமைந்துள்ளன. இலங்கையின் இறைமைவாதிகளும் அவர்களின் இருப்பிற்தாக இறைமையை விரித்தும் சுருக்கியும் விளக்குவர். சில வேளைகளில் சிறிய சந்தர்ப்பங்களைப் பெரிது படுத்துவதும் பல சந்தர்ப்பங்களில் பெரிய விடயங்களை சட்டை செய்யாமலும் இருப்பர்.
அமெரிக்க தூதுவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தைப் பெருமையாக கொண்டவர்கள் கோதாபய ஜனாதிபதி வேட்பாளராக வருவதை விரும்பவில்லை என்று கூறியதைக் கேட்டு அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாக கூறுகின்றனர்.
அமெரிக்க தூதுவர் மஹிந்தவை சந்தித்ததை ஆரம்பத்தில் விரும்பாமல் இருந்தவர்கள் கோதாபய ஜனாதிபதி வேட்பாளராக வருவதை அமெரிக்காவும் மேற்குலகமும் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார் என்ற செய்திகேட்டு மகிழ்வடைகின்றனர். இதுவே இந்த இருவகை தேசப்பற்றாளர்களினதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு.
தமிழ்த் தேசிய வாதிகளுக்கு கோதாபயவிற்கு அமெரிக்காவினதும் மேற்குலகினதும் ஆசீர்வாதம் இல்லை என்பது நல்ல செய்தி.
தேசிய இனப்பிரச்சினைக்கு அமெரிக்காவால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது போன்று ஒரு மகிழ்வு அமெரிக்க ஆசிர்வாதத்துடன் பதவிக்கு மைத்திரி ரணில் அரசாங்கத்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு எந்த தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்று தெளிவு பெற்றுள்ளபோதும், அந்த மகிழ்வு ஏற்படுகிறது.
மலையக் தமிழ்மக்களின் தலைர்களுக்கு யார் ஆண்டாலும் அவர்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற திருப்தி இருக்கிறது. முஸ்லிம் மக்களின் தலைவர்களை அண்மைக்காலங்களில் நோன்பு துறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மஹிந்தவும் கோதாவும் மகிழ்வித்து வருகிறார்கள்.
இது முட்டைகள் அனைத்தையும் ஒரே பாத்திரத்தில் போட்டுவிடக்கூடாது. எல்லாப் பாத்திரங்களில் போடவும் முட்டைகளை வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு மறைந்த முஸ்லிம் தலைவரின் மேற்கோளுக்கிணங்க செயற்படும் ராஜதந்திரமாக இருக்கலாம்.
அண்மையில் ஒரு இராணுவ அதிகாரி இடமாற்றலாகி வெளியேறும் போது கிளிநொச்சி மக்கள் அணிதிரண்டு அழுது புலம்பி அவருக்குப் பிரியாவிடை கொடுத்தாதாகக் காட்டப்பட்ட சம்பவத்தினால் கிளிநொச்சி மக்கள் தேசிய அபிலாஷைகளையும் உரிமைகளையும் முற்றாகக் கையுதிர்த்து விட்டதாக கொள்ள முடியாது.
அந்த இராணுவ அதிகாரியின் மீதான கிளிநொச்சி மக்களின் ஈர்ப்பு தனிப்பட்டதாகவும் இருக்கலாம். திட்டமிட்ட இராணுவ நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம்.
இவ்வாறு தமிழ்மக்களால் சில இராணுவ அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகள் கடந்த காலங்களிலும் மதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மதிக்கப்பட்டதால் தமிழ்மக்களின் தேசிய அபிலாஷைகள் இராணுவவாதத்திற்குச் சோரம் போய்விடவில்லை. அதனால் கோதாபயவை தமிழ் மக்கள் ஆதரிப்பர் என்று பீதியடைவது அவசியமற்றது.
கோதாபய பெருந்தேசிய அடிப்படை வாதத்தால் கட்டுண்டுள்ள சிங்கள மக்களின் பெருப்பகுதியினரையும் தமிழ் முஸ்லிம் மலையகத்தமிழ் மக்களின் சிறிய பிரிவினரின் ஆதரவையும் பெற முயற்சிக்கலாம்.
அதன் தாங்கம் அரசாங்க மாற்றம், நாட்டுத் தலைவர்களின் தெரிவு போன்றவற்றில் தவிர்க்க முடியாது இருக்க குறித்த தலைவர்களின் செயற்பாடுகளும் காரணமாகின்றன.
கோதாபயவின் அரசியல் பிரசேம் அடக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமன்றி அவரின் பொருளாதாரக் கொள்கை இந்நாட்டின் தொழிலாளர்கள் விவசாயிகள் உட்பட சாதாரண மக்களுக்கு சாதகமாக இராது.
அவரது இராணுவ வாதம் ஜனநாயகத்திற்கு விரோதமாகவே இருக்கும். அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கோதாபயவை ஆசீர்வதிக்கவில்லை என்பதால் அவரைச் சிறந்த ஏகாதிபத்திய எதிர்பாளராகவும் என்றும் தேசப்பற்றாளராகவும் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
அவரை ஆசீர்வாதிக்கவில்லை என்பது மறைமுகமாக அல்லது விளைவுரீதியாக அவரை ஆதரிப்பதாகவும் இருக்கலாம்.
கோதாபயவிற்கு அமெரிக்க எதிர்ப்பிருப்பதாகக் காட்டுவதால் சிங்கள மக்களின் ஆதரவை திரட்டிக் கொடுக்கும் உள்நோக்கமும் இருக்கலாம். இது ஒருவகை நேரிடை எதிர்ப்பு உபாயமாகும்.
கோதாபய அமெரிக்க பிரஜை நவதாராளவாதத்திற்கு எதிரானவரல்ல. அதனால் அவரால் வெறுக்கப்படுபவராக இருக்க நியாயமில்லை. ஆனால் அவர் நாட்டின் தலைவரானால் இலங்கை முற்றாக ஏகாதிபத்திய நாடுகளினதும், சக்திகளினதும் போட்டிக்களமாக மாறலாம்.
அந்நாடுகளையும் சக்திகளையும் தனது இருப்பிற்காக உதவிக்கு அழைத்துச் கொண்டு அவற்றிடையேயான முரண்பாடுகளைக் கையாளப்போவதாக அவர் மனப்பால் குடிக்கலாம். அவை இலங்கையை சீர்குலைக்கும்.
கோதாபய அமெரிக்க பிரஜா உரிமையை துறந்தாலே இலங்கையின் ஜனாதிபதிபதவிற்குப் போட்டியிடலாம். அதனைத் துறப்பது இலகுவல்ல என்று கூறப்படுகிறது. அதனால் அவர் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.
அதனை இலகுவாகத் துறந்துவிட்டு போட்டியிடலாம் என்று கோதாபய கூறுகிறார்.
கோதாபய ஒரு வேட்பாளரானால் மைத்திரியும் ரணிலும் வேட்பாளராகலாம் . அவர்கள் எல்லோருமே இலங்கையர்கள் என்றாலும் சிங்களவர் என்றாலும் அவர்கள் இந்நாட்டின் சாதாரண மக்களின் அடக்கப்படும் தேசிய இனங்களின் வேட்பாளர்களா?
முடிவு செய்ய வேண்டியது இலகு. அவர்களைத் தடுத்து சரியான ஒருவரை ஜனாதிபதி ஆக்க முடியுமா?
– இளையதம்பி தம்பையா