காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரான பிரபா கணேசன் கூறியுள்ளார்.
வவுனியா – வெளிக்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆரம்ப காலங்களில் வேறு கட்சியில் இருந்த போதும், அதன் பின் புது கட்சி ஆரம்பித்த போதும் நான் பல போராட்டங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பு நடத்தியிருக்கின்றேன்.
அதுபோல் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பாரிய அழுத்தத்தை கொடுத்திருந்த போதும் அந்த அழுத்தங்கள் சரியான முறையில் செற்படுத்தப்படவில்லை.
காணாமல்போனவர்களின் விடயங்கள் மற்றும் வெள்ளைவான் விடயங்களை வைத்து அரசியலில் புகழாரம் பெற்றவர்கள் இன்று தேசிய அரசாங்கத்தில் இருந்து கொண்டு அவர்களை பற்றி பேசுவது இல்லை.
எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல்போனவர்கள் என்று யாரும் இல்லை எனவும், அவர்கள் இறந்து விட்டார்கள் இல்லாவிடின் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்கள் எனவும் நேரடியாகவே கூறியிருக்கிறார்.
இப்படியான ஒரு நிலைமை இங்கு இருக்கின்ற போது காணாமல் போனவர்களுக்காக புதிய அலுவலகம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். இந்த அலுவலகம் என்பது வெளிநாட்டினை ஏமாற்றுவதற்கான கண்கட்டி வித்தை என்றுதான் நான் பார்க்கின்றேன்.
இந்த காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்பது எனக்கு நன்றாக தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.