சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை நேற்றுடன் நீக்கப்பட்ட நிலையில் பல பெண்களும் வீதிகளுக்கு வாகனங்களை எடுத்து வந்து தடை தளர்த்தப்பட்டதை கொண்டாடியுள்ளனர்.
“நான் விசித்திரமாக உணர்கிறேன், நான் மகிழ்ச்சியாக உள்ளேன். இதனை செய்வதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று தனது கறுப்பு நிற லெக்சுஸ் கார் வண்டியில் தலைநகர் ரியாதில் முதல்முறை சுற்றித் திரிந்த 23 வயது மஜ்தூலீன் அல் அதீக் குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சல்மானின் மகனான முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் சீர்திருத்த நடவடிக்கையாக கடந்த செப்டெம்பரில் இந்த தடையை தளர்த்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிழக்கு நகரான கோமாரிலும் பெண்கள் வாகனத்தை வீதிகளில் செலுத்தியதோடு பொலிஸார் அவர்களை வரவேற்றனர்.
“நாம் தயாராக உள்ளோம், இது எமது வாழ்வை முழுமையாக மாற்றும்” என்று வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட முதல் பெண்களில் ஒருவரான 47 வயது உளவியலாளர் சமிரா அல் கம்தி குறிப்பிட்டார்.
உலகில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஒரே நாடாக விளங்கிய சவூதி அரேபியாவில், பெண்கள் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் தனியார் ஓட்டுனர்களை நியமிப்பதே ஒரே வழியாக இருந்தது. இந்த தடைக்கு பல ஆண்டுகளாக சர்வதேச கண்டனங்கள் இருந்து வந்த நிலையிலேயே அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
“நாட்டின் எந்த ஒரு இடத்திற்கும் வாகனத்தை ஓட்டிச் செல்ல தற்போது அனைத்து பெண்களுக்கும் உரிமை உள்ளது” என்று சவூதி போக்குவரத்து அதிகாரசபையின் பேச்சாளர் கர்னல் சமி பின் முஹமது அந்நாட்டு அரச தொலைக்காட்சியான அல் எக்பரியாவில் நேற்று குறிப்பிட்டார்.
பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ள நாடுகளில் ஒன்றான சவூதியில் இம்மாத ஆரம்பத்தில் பெண்களுக்கு முதல் முறை வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வாகனம் ஓட்ட தயாராகும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சவூதியில் ‘இறைவன் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுங்கள்’ என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த தடை தளர்த்தப்பட்டிருப்பதை வரவேற்றிருக்கும் செயற்பாட்டாளர்கள் பெண்கள் இன்னும் பல முட்டுக்கட்டைகளை தாண்ட வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.