யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் 30 வருட யுத்தத்தின் பின்னர் 200 மில்லியன் ரூபா முதலீட்டில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரனால் குறித்த நிறுவனம் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தனியார் முதலீட்டாளர்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
வடமாகாண சபை மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளரினால் 100 ஏக்கர் அரச காணிகள் வழங்கப்பட்டு, அதில் லண்டனில் புலம்பெயர்ந்து வசித்து வரும் முதலீட்டாளர் 200 மில்லியன் ரூபா நிதியை முதலீடு செய்து யாழ்.மாவட்டத்தில் இந்த உப்பு உற்பத்தி நிறுவனத்தினை ஆரம்பித்துள்ளார். இந்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இதன்போது நிகழ்வில் உறுப்பினர்களுக்கான கௌரவங்களை தவிர்த்து அந்த நிதியைப் பயன்படுத்தி தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 110 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரின் செயலளார் திருமதி கேதீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் கேசகவன் சயந்தன் மற்றும் சுகிர்தன், தென்மராட்சி பிரதேச செயலாளர், யாழ்.மாவட்ட செயலக உதவி திட்டப்பணிப்பாளர் ஸ்ரீரங்கன், கைத்தொழில் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஸ்ரீமோகனன், சகாதேவன், ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனர் சகாதேவன் மற்றும் தென்மராட்சி பிரதேச சபை தவிசாளர் கந்தையா வாமதேவன் மற்றும் தென்மராட்சி பிரதேச சபை அரியகுட்டி நிமலருபன் தனங்கிளப்பு வட்டார உறுப்பினர், பிரதேச செயலக உறுப்பினர்கள் மற்றும் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.