ஸ்பெயின் நாட்டில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென்று துர் நாற்றம் வியாபித்ததால் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விமானத்தை அவசரமாக தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேனரி தீவுகளில் விடுமுறையை கழித்துவிட்டு நாடு திரும்பியுள்ளார் ரஷ்ய இசைக்கலைஞரான 58 வயது Andrey Suchilin. கேனரி தீவுகளில் இருக்கும்போதே இவருக்கு ஒருவகையான தீவிர தோல் வியாதி பிடிபட்டுள்ளது. தமது நிலைமை மிக மோசமாவதை உணர்ந்த ஆண்ட்ரே சுஷிலின் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்துள்ளார். நோய் தொற்று காரணமாக அவரது தோல் அழுகி துர் நாற்றம் வீசும் அளவுக்கு மோசமானது. இந்த நிலையில் கேனரி தீவுகளில் இருந்து ஆம்ஸ்டர்டம் நோக்கி விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த துர் நாற்றம் மொத்த விமானத்திலும் வியாபித்துள்ளது. இது சக பயணிகள் பலருக்கும் வாந்தி மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் ஒவ்வாமையால் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து சுஷிலினை கழிவறையில் தனிமைப்படுத்தும் முயறிகளும் வீணான நிலையில் விமானி போர்த்துகலில் உள்ள Faro நகரில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த மே மாதம் 30-ஆம் திகதி நடந்துள்ளது. பலர் தம்மை அந்த விமானத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூக்குரல் எழுப்பியதை எனது காதால் கேட்டேன் என சுஷிலின் அவரது பேஸ்புக் பக்கத்தில் அன்றைய தினம் பதிவிட்டிருந்தார். போர்த்துகலில் உள்ள ஒரு மருத்துவமனையில் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே சுஷிலின் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட பின்னரும் அவரது நோய் தாக்கம் அதிகரித்து பின்னர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே கடந்த திங்களன்று ரஷ்ய இசைக்கலைஞரான Andrey Suchilin மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.