இந்தியாவை வீழ்த்தி ஆஸி. மீண்டும் சாம்பியன்

196

6 நாடுகள் இடையிலான 37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தின் பிரிடா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. 24-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளாக் கோவர்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். சில பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோட்டைவிட்ட இந்தியா 42-வது நிமிடத்தில் சாகர் பிரசாத் மூலம் பதில் கோல் திருப்பியது. வழக்கமான நேரத்தில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனதால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா தனது 5 வாய்ப்புகளில் 3-ஐ கோலாக்கியது. இந்தியா தங்களுக்கு வழங்கப்பட்ட முதல் 4 வாய்ப்புகளில் ஒன்றை மட்டுமே கோலாக்கியது. சர்தார்சிங், ஹர்மன்பிரீத் சிங், உபத்யாய் ஆகியோரின் ஷாட்டுகளை ஆஸ்திரேலிய கோல் கீப்பர் டைலர் லோவெல் முறியடித்தார்.

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து 15-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றியது. இதுவரை சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லாத இந்திய அணி தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதி சுற்றில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை வென்றது.

SHARE