
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக, ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் இவ்விருதுகள், ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகுந்த மதிப்புடைய உயர் விருதாக கருதப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சமந்தா க்ளேர் டைலர் மற்றும் இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தி வால்(சுவர்), இரும்புக்கோட்டை என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் தற்போது இளையோர் அணியின் (யூ-19) பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
1996 ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு இவர் ஆற்றிய பங்கு ஏராளம். இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13,288 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,889 ரன்களை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதை இதற்கு முன் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில்தேவ் மற்றும் அனில் கும்ளே ஆகியோர் பெற்றுள்ளனர்.