நியுயோர்க்டைம்ஸிற்கு தகவல் வழங்கிய பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்

194

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த செய்திகளிற்கான தகவல்களை வழங்கிய பத்திரிகையாளர்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான அரசியல்வாதிகள் அச்சுறுத்திவருவதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான துல்லியமான புலனாய்வு செய்திக்கான தகவல்களை வழங்கிய இரு பத்திரிகையாளர்களை முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் பகிரங்கமாக விமர்சித்துள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் இவ்வாறான விதத்தில் அச்சுறுத்தப்படுவதை ஏற்க முடியாது என நியுயோர்க் டைம்சின் சர்வதேச பதிப்பிற்கான ஆசிரியர் மைக்கல் ஸ்லக்மன் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்டைம்சிற்கும் ஏனைய பத்திரிகைகளிற்கும் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் என நியுயோர்க் டைம்ஸ் எதிர்பார்க்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச நியுயோர்க் டைம்ஸ் கட்டுரை தொடர்பாக எங்களுடன் தொடர்புகொள்ள விரும்பினால் அவர் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை விடுத்துவிட்டு எங்களுடைய மூத்த பத்திரிகையாளர்களை அவர் தொடர்புகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE