போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேர் உட்பட 19 பேர் கைது

209
சென்னை விமான நிலையம்

போலியாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற 12 பேரையும் அவர்களை அனுப்பிவைக்க முயன்ற 7 பேரையும் இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் கைதுசெய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கனடாவில் நடக்கவிருக்கும் ஒரு நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக செல்வதாகக் கூறி விசா பெற்றுள்ளதும் தெரியவந்திருக்கிறது.

திங்கட்கிழமையன்று அதிகாலை 12.15 மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்றத் துறை அதிகாரிகள், 19 பேர் கொண்ட கனடா செல்லும் குழு ஒன்றைத் தடுத்து நிறுத்தினர். இவர்களில் 12 பேரது பாஸ்போர்ட்கள் போலியாக இருப்பது கண்டறியப்பட்டது.

கனடா நாட்டில் பணியாற்றுவதற்கான விசா வைத்திருந்த இவர்கள் அனைவரும் அதிகாலையில் புறப்படவிருந்த லுஃப்தான்ஸா விமானத்தின் மூலம் கனடாவுக்குச் செல்லவிருந்த நிலையில், தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மும்பையில் உள்ள கொரியோ கல்ச்சர் இன்டர்நேஷனல் டான்ஸ் அகாடமியைச் சேர்ந்த ரேகா, பிரேம்சந்த், ராகுல் ஆகிய மூன்று பேரும், மேலும் நான்கு பேருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக தங்களது விசாரணையில் தெரியவந்திருப்பதாக குடியேற்றத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் ராகுலின் சகோதரரான அஞ்சன் சிவகுமாரே இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த குஜராத்தைச் சேர்ந்த 12 பேரும் உண்மையில் நடனம் அறிந்தவர்கள் அல்ல என்றும் நடனக் கலைஞர்கள் என்ற பெயரில் கனடா சென்று, அங்கு பணியாற்றுவதே அவர்களது நோக்கமென்றும் தெரியவந்திருப்பதாகவும் குடியேற்றத் துறை தெரிவிக்கிறது. இந்த பன்னிரெண்டு பேருக்கும் சில நடனை அசைவுகளை மட்டும் கற்றுக்கொடுத்து அவர்களை கனடாவில் பணியாற்ற போலி பாஸ்போர்ட்டில் அழைத்துச் செல்ல முயன்றதாகவும் குடியேற்றத் துறை சென்னை மாநகர காவல்துறையிடம் அளித்த தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 12 பேரில் 6 பேர் குஜராத்தின் காந்தி நகர் மாவட்டத்தையும் 2 பேர் ஆனந்த் மாவட்டத்தையும் 2 பேர் மஹேசன் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் இருவர் வெறும் ஆதார் எண்ணை மட்டும் அளித்துள்ளனர். இந்தப் பன்னிரெண்டு பேரில் 3 பேர் பெண்கள்.

இவர்கள் அனைவரும் குடியேற்றத் துறை அதிகாரிகளால் சென்னை மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போலி பாஸ்போர்ட் அனைத்திலும் மும்பை முகவரியே இடம்பெற்றுள்ளது. இவர்கள் பெங்களூரிலிருந்து கனடாவுக்கான விசாக்களைப் பெற்றுள்ளனர். இதற்கு முன்பாக, 30க்கும் மேற்பட்டவர்கள் இதே பாணியில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவர்களிடம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 11 பேர் கொண்ட கும்பல் ஒன்றை காவல்துறை கைதுசெய்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது மீண்டும் போலி பாஸ்போர்ட்டில் 12 பேர் சென்னை மூலம் வெளிநாடு செல்ல முயன்றுள்ளனர்.

SHARE