மன்னார் நகர் நிருபர்
மன்னார் நகரில் அரச தனியார் பேரூந்து தரிப்பிடங்களை ஒன்றிணைத்து புதிதாக அமைக்கப்படவுள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.


குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று (4) புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம்பெற்றது.
அதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக பராமரிப்பு செய்யப்படாமால் காணப்பட்ட மன்னார் பேரூந்து தரிப்பிடம் மன்னார் நகர சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக இலங்கை நகர அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் புதிய பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மன்னார் நகரத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பேரூந்து தரிப்பிடமானது மிகவும் அழகான முறையில் காட்சியளிக்கப்படவுள்ளது.
எதிர் காலத்தில் மன்னார் மிகவும் அழகிய பேரூந்து தரிப்பிடத்தை கொண்டதாக காட்சியளிக்கும்.
குறித்த பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கான நிதியானது நகர அபிவிருத்தி திட்டத்தினூடாகவே பெற்றுக்கொள்ளப்பட்டதே தவிர வேறு எந்த அமைச்சினூடாகவும் அல்லது அமைச்சர்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
குறித்த நிதியானது மன்னார் நகர சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி.
மேலும் எதிர்காலங்களில் மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
அதற்கான ஆவணங்கள் குறிப்பிட்ட திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னாரின் புதிய பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கான ஒப்பந்ததாரர்களையும் எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இன்னும் சில தினங்களில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. நகர திட்டமிடல் பணிப்பாளரினால் குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்கான வரை படமும் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நகர முதல்வர் குறித்த வேலைத்திட்டமானது நகரத்தை அபிவிருத்தி செய்யும் செயற்பாடாகவே கருதவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.