வவுனியாவில் முஸ்லீம் அரச அதிபர் நியமிக்கப்படுவதில் ஏற்படும் முரண்பாடுகள் அவசியமற்றது

185

தகுதிகளின் அடிப்படையிலேயே அரச அதிபர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக SLAS முடித்து உரிய தரத்தில் நியமிக்கப்படுபவர் இருத்தல்வேண்டும். SLAS முடிக்காதவரும் மாவட்டங்களில் அரச அதிபர்களாக கடமையாற்றியிருக்கின்றனர். தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமது அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையே அரச அதிபராக ஒருவரை நியமித்துக்கொள்ளும். அவர்களுக்கு ஏற்றால்போல் செயற்படுபவர்களையே அரச அதிபர்களாக மாவட்டங்களுக்கு நியமிப்பார்கள். மாகாண சபையினை அடிப்படையாகக்கொண்டு; அமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் என மாற்றம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் வவுனியாவில் UNP அரசு தனது நிலையினை தக்கவைத்துக்கொள்வதற்கு அரச அதிபர் பதவியினை ஒரு உத்தியாக தக்கவைத்துக்கொள்கிறதே தவிர சிங்கள அரச அதிபரை விட ஒரு தமிழ் பேசும் மகன் ஒருவர் மதத்தின் பெயரால் வேறுபட்டிருந்தாலும் மொழி அடிப்படையில் ஒன்றாக இருப்பதன் காரணமாக அவர் இப்பிரசேத்தில் கடமையாற்றுவது என்பது தவறல்ல.

சிங்கள அரச அதிபர், வவுனியாவில் பதவியில் இருந்தபோது வன்னி மாவட்ட அரசியல்வாதிகளால் அவரை மாற்றமுடியவில்லை. ஒரு கட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது. தமிழர் ஒருவரை அரச அதிபராக நியமிக்கவேண்டும் என மாகாண பாhளுமன்றத்திலும் எடுத்துரைத்தனர். ஆனால் இவர்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை. அந்த அடிப்படையில் வன்னியில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் முதுகெலும்பில்லாதவர்கள் எனக் கூறுவது சிறந்தது.
தமது நலனுக்கேற்ற வகையில் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் இவர்கள் முஸ்லீம்களுக்கு வவுனியா மாவட்டம் தாரைவார்த்துக்கொடுக்கப்படுகிறது என ஒருசிலரைக்கொண்டு சமூக வலைதளங்களிலும், ஒரு சில இணைய ஊடகங்களிலும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறித்த முஸ்லீம் அரச அதிபர் இம்மாவட்டத்தில் கடமையாற்றி தமிழினத்திற்கு துரோகம் விளைவிக்கின்றபோது அதனை நாம் தட்டிக்கேட்க முடியும். தொடர்ச்சியாக வந்த சிங்கள அரச அதிபர்களுக்கு துணைபோன தமிழ் அரசியல் தலைமைகள் வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க இயலாது தோற்றுப்போன அரசியல் தலைமைகள், மக்கள் குடியிருப்புக்களான ஜோசப் முகாமை அகற்ற முடியாதவர்கள், அத்துமீறி வைக்கப்பட்டுள்ள பௌத்த சிலைகளை அகற்ற முடியாத அரசியல் தலைமைகள், சம்மாந்துறையினைச் சேர்ந்த முஸ்லீம் அரச அதிபர் கடமையாற்ற வருவதற்கு முற்கூட்டியே தமது எதிர்ப்புக்களைத் தெரிவிக்கின்றனர். இது இவர்களது வங்குரோத்து அரசியலையே எடுத்துக்காட்டுகிறது.

தற்போது எதிர்க்கின்றவர்கள் குறித்த அரச அதிபர் கடமையில் ஈடுபடத்தொடங்கியதும் அவரிடம் தான் செல்வார்கள். காரணம் இதற்கு முன்னர் இருந்தவர்களுடனும் இவ்வாறே செயற்பட்டனர். இது ஒரு பாரிய விடயமல்ல. நாட்டில் தமிழ் மக்களுக்கான இனவிடுதலைக்கானத் தீர்வுகள், காணாமல் ஆக்கப்டோருக்கான போராட்டங்கள் போன்ற பல பிரச்சினைகளுக்குரியத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தவறிவிட்ட இவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு எதிர்ப்பலைகளைத் தோற்றுவிப்பது என்பது அவர்களது சுயலாப அரசியலையே எடுத்துக்காட்டுகிறதே தவிர, திராணியற்ற இவர்களது வெறும் கோசங்களை ஏற்றுக்கொள்ள இயலாது.

SHARE