எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு முதலமைச்சரின் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
உண்மையை உணர்ந்த பின்னரே அவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன்.
இரத்தின பிரியபந்து இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும், சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள்.
எமது மக்களுக்கு பாதுகாப்பில்லை, எமக்கு அதிகாரங்கள் இல்லை, எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லை, எமக்கு மதிப்பில்லை, புறக்கணிக்கப்படுகின்றோம், ஆக்கிரமிக்கப்படுகின்றோம். ஆகவே இரத்தினப்பிரியபந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க ரஞ்சன் ராமநாயக்க முன்வர வேண்டும்.
எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம். வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன்.
இங்குவந்து இராணுவத்தினரிடமோ பொலிசாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று!
கேள்வி – நீங்கள் சம்மதம் தெரிவித்தே வவுனியா, மன்னார் அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்படுகின்றார்கள் என்று பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதே. அதுபற்றி?
பதில் – என்னுடன் எவரும் பேசவுமில்லை சம்மதம் எதுவும் கேட்கவுமில்லை. இவ்வாறான பச்சைப் பொய்களை பத்திரிகைகள் புனைந்துரைக்கின்றனவா அல்லது அப்பிரதேச அரசியல்வாதிகள் பத்திரிகைகளுக்கு பொய்யான தகவல்களைக் கூறிவருகின்றார்களா? தயவு செய்து விசாரித்துச் சொல்லுங்கள்.
கேள்வி – விஜயகலா மகேஸ்வரன் கூறியது பற்றி தெற்கில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளதே? அது பற்றி உங்கள் கருத்து.
பதில் – வடமாகாணத்தின் தற்கால பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. நான் அண்மைய கூட்டத்தில் இருந்தேன். ஆனால் விஜயகலா கூறியசொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலைமாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை.
முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டுஅணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்றுஅப்படியா?
வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால் தான் நான் இராணுவத்தை திரும்ப அழையுங்கள், பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகலவன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்.
நிலைமையை புரிந்துகொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களை பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது.
எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன்.
பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம்.