தமிழர் கோயிலில் இனி தமிழிலே வழிபாடு!!! சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!!!தமிழர் களம் மலேசியாவின் பத்திரிகையாளர் சந்திப்பு விளக்க கூட்டம்!!!

340

மலேசியாவில் தமிழர் இனமீட்சி, மொழிமீட்சி, வரலாற்று மீட்சி ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து தமிழர்களிடையே விழிப்புணர்வையும் சிந்தனைத் தெளிவையும் ஊட்டிவரும் தமிழர் தேசிய இயக்கமான தமிழர் களம் மலேசியா பேரியக்கம், தனது அடுத்த முன்னெடுப்பாக தமிழர் சமயம் மீட்சி என்ற தலைப்பில் தமிழியல் வழிபாடே தமிழர் வழி என்ற கருப்பொருளில் விஸ்மா துன் சம்பந்தன், டத்தோ சோமா அரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்
, மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் மற்றும் மலேசிய சைவ நற்பணி கழகத்தின் தலைவர் திருமுறைச் செல்வர் ந. தர்மலிங்கம் ஆகியோர் தெளிவுரைகளை வழங்கினர்.
தமிழர் களம் மலேசியா பேரியக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர் அர.எழிலன் நிகழ்ச்சியின் நோக்கம், இலக்கு ஆகியவற்றை விளக்கி தெளிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய முனைவர் ஆறுமுகம் நாகப்பன் அவர்கள், தமிழர்கள் இன்று உலகலாவிய நிலையில் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு இனம், மொழி, சமயம் என்ற மூன்று கூறுகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இனம் என்பதில், யார் தமிழர் ? என்று இன்று பலராலும் பரவலாகக் கேட்கப்படும் கேள்விக்கு தமிழர்கள் தெளிவான , தீர்க்கமான பதிலைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய அவர், தமிழர்களுக்குப் பிறந்தவர்களே தமிழர்கள், கலப்புத் திருமணத்தில் தந்தையின் வழியே பிள்ளைகளின் இனம் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தில் தமிழர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ் மொழியில் ஆற்றலும் புலமையும் பெற்றிருந்தாலும் அயலார் அயலாரே என்றும் அவர்களைத் தமிழர்களாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது, ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அவ்வாறு தமிழ் பேசுபவரையெல்லாம் தமிழராக ஏற்றுக் கொண்டதால் தான் தமிழரினம் இன்று இந்த நிலையில் நிற்கிறது. எனவே இனத்தை வரையறை செய்வதே நாம் செய்ய வேண்டிய பணிகளில் முதன்மையானது என்று பலத்த கரவொலிக்கிடையே அவர் கூறினார்.
தமிழர்கள் தங்களின் சமய மரபினை அறிந்திருப்பது மிக அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், மரபு வழிச் சமயம், சைவ ஆகம வழிச் சமயம் ஆகியவற்றின் அடிப்படை செய்திகளை தமிழர்கள் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் இதில் தெளிவின்மையால்தான் தமிழர்கள் தங்களின் சமயத்தின் அடிப்படை வழிபாட்டு குறைகளிலிருந்து இன்று திசைமாறிச் சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்டார். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், இந்து என்பது ஒரு மதமல்ல என்றும் அது இடத்தைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லே அன்றி மதத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டதல்ல என்று உறுதியாகக் கூறினார்.
ஆரிய பிராமணியத்தின் இந்து மதக் கொள்கைகள், பிராமணிய வேதங்களின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தின் வழி நிற்பவையே என்றும் தமிழர்களுக்கான இறைநெறிக்கான நூல்களான தேவாரம், திருவாசகம் போன்ற பல தமிழர் சமய நூல்களின் துணை கொண்டு தமிழர்களான நாம் நமது தமிழர் சமயத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வந்திருந்தோரைக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து தமிழியல் வழிபாடே தமிழர் வழிபாடு என்ற கருத்தை வலியுறுத்தி திருமுறைச்செம்மல் ந.தர்மலிங்கம் உரையாற்றினார். நமது தாத்தாவும் பாட்டியும் முனியாண்டியையும், கருப்பணையும் சமஸ்கிருதத்திலா வழிபட்டார்கள் ? என்ற கேள்வியை முன்வைத்த அவர், இன்று ஏன் நாம் தமிழில் வழிபாடு செய்யத் தயங்குகிறோம் என்று வினவினார்.
யாரும் நம்மை தமிழில் வழிபாடு செய்யக் கூடாது என்று தடை செய்யவுமில்லை, செய்யவும் முடியாது என்று அவர் தெரிவித்தார். தமிழில் வழிபாடு செய்யச் சொல்லாதது நமது உலவியல் சிக்கலே என்றும் அந்த உலவியல் சிக்கல் பன்னெடுங்காலமாக தமிழர்களின் சிந்தையில், சமஸ்கிருதமே தெய்வ மொழி என்று பதிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
அருணகிரி நாதருக்கும் சுந்தருக்கும் ஆண்டவன் தமிழிலேதான் அடியெடுத்துக் கொடுத்து, தன்னைப்பாடச் சொன்னானே அல்லாமல் சமஸ்கிருதத்தில் அல்ல என்பதை தமிழர்கள் உணர வேண்டும் என்றும், தமிழ்ச் சங்கங்களுக்குத் தலைவர்களாக கடவுளே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளதையும் நாம் உள்வாங்கிக் கொண்டால், ஆண்டவனை நெருங்கிச் செல்ல தமிழ் மொழியத் தவிர வேறு எந்த கருவியும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.
இன்று குடும்பத்தில் நடக்கும் பூப்பெய்தல் தொடங்கி, இறப்பு நிகழ்ச்சிவரை இடைத்தரகராக யாரையோ கொண்டுவந்து வைத்துக் கொண்டு, புரியாத மொழியில் காரியங்களை செய்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் சிந்தனையில் மாற்றம்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வீட்டின் பெரியவர்களைக் கொண்டு, பெண்களைக் கொண்டு நாமே நம் தமிழ் மொழியில் காரியங்களைச் செய்யலாம் என்றும் அதற்கான பயிற்சிகளை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் பலத்த கரவொலிக்கிடையே அவர் கூறினார்.
நமது சமயத்தை மீட்பது என்பதும், இறையை தமிழில் வழிபட வேண்டும் என்பதும், நாம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்றும், வீட்டில் பெரியவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை கற்றுக் கொடுப்பதுடன், அவற்றை ஓதி வழிபாடு செய்ய குழந்தைகளை பயிற்றுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இவற்றையெல்லாம் முறையாக , முனைப்பாக தமிழர்கள் நாம் முன்னெடுத்து செயல்பட்டால் தமிழர் சமயத்தையும் தமிழியல் வழிபாட்டையும் விரைவில் நம்மால் மீட்டெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தமிழருக்கே உரிய வாழ்வியல், மரபு வழிபாடுகள் அனைத்தையும் தமிழர் சமயமாக ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, தமிழர்களே அதை வழிநடத்த வேண்டும். அதுவே மீட்சியென தமிழர் களம் தலைமைப் பொறுப்பாளர் தமிழ்ப்புகழ் குணசேகரன் கருத்துரைத்து, இம்முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
தமிழர் சமயம் மீட்சியை ஆதரிப்போர் பட்டியல்.
1.தமிழர் களம் மலேசியா
2.மலேசிய சைவ சமயப் பேரவை
3.மலேசிய சைவ நற்பணி கழகம்
4.கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம்
5.மலேசிய தமிழ் பண்பாட்டு இயக்கம்
6.வள்ளலார் நற்பணி மன்றம் பெட்டாலிங் செயா
7.தமிழர் நடுவம் மலேசியா
8.மலேசிய மரபுசார் வேளாண் இயக்கம்
9.அறிவுசார் இளந்தமிழர் இயக்கம்
10. மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கம்
11. தமிழியம் மலேசியா
12. மலேசிய தொழில் திறன் மேம்பாட்டு கழகம்
13. தமிழர் சமூக மேம்பாட்டு கழகம் (விவேகம்) மலேசியா
14. மலேசியத் தமிழர் சங்கம்
15. உலகத் திருக்குறள் பணிக்களக் கல்வி அறவாரியம்
16. மலேசியத் தமிழர் வளர்ச்சி மன்றம்
17. தமிழர் கழகம் மலேசியா
18. மாமா மீசை சட்டி சோறு உணவகம்
19. GP GRAPHICS ENTERPRISE
கபு வடிவமைப்பு மையம்
20. MSK போக்குவரத்து நிறுவனம் MSK Trading ( transport )
21. மலேசிய தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம்
22. பத்திரிக்கை விநியோக சங்கம் கோலாலம்பூர்/சிலாங்கூர் Persatuan pengedar Aliran media utama&penerbitan Kuala Lumpur&Selangor.
23. Janulasi Enterprise (இணைய வணிகம்)
24. அருள்மிகு ஓம் சிவமுனீசுவரர் கோயில்(Om Sri Sivamuniswarar Alayam)
25. GTK TAMIL ENTERPRISE
26. RMC MOTOR
27. GMAF Services
28. வள்ளுவம் மலேசியா Kebajikan valluvam malaysia
29. அருள்மிகு மாரியம்மன் கோயில் (தெலுக் பங்லிமா காராங் தோட்டம்)
30. டி.எல்.பி. எதிர்ப்பு இயக்கம்.
31. நீலாய் சைவ சமய மன்றம்.
32. ஆயர் கூனிங் தமிழர் இயக்கம்.
SHARE