வடமாகாண சபையின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வினைத்திறனான நிர்வாகத்திற்கும் பங்காற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் செயலாற்றியமைக்காக 15 தங்க விருதுகளை வடமாகாண சபை பெற்றுள்ளது. வடமாகாணத்தைச் சேர்ந்த 15 நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கக் கணக்குகள் குழுவால் இலங்கைத் தீவு முழுவதும் அடங்கலாக ஒன்பது மாகாண சபைகளிலுமுள்ள மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் விசேட செலவின அலகுகள் உள்ளடங்கலாக 260 நிறுவனங்கள் முதன்மை செயலாற்றுகை சுட்டிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட போது 35 நிறுவனங்கள் 93 க்கு மேற்பட்ட அதியுயர் செயலாற்றுகை மட்டத்தை அடைந்துள்ளன.
இதில் வடமாகாண சபையைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது மாகாண சபைக்கு 2015 ஆம் ஆண்டில் ஏழு தங்க விருதுகள் கிடைத்தன. தற்போது 2016 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் 15 தங்க விருதுகள் கிடைக்கவிருக்கின்றன. எனவே, எதிர்வரும் ஆண்டுகளில், வடமாகாண சபையின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வினைத்திறனான நிர்வாகத்திற்கும் பங்காற்றக வேண்டும் என்றார்.