இலங்கையில் இனவாதத்தை ஒழிக்காமல் சமாதானத்தைக் காண முடியாது அது காணல் நீராகவே இருக்கும்.

176

 

இலங்கையில் இனவாதத்தை ஒழிக்காமல் சமாதானத்தைக் காண முடியாது அது காணல் நீராகவே இருக்கும். என்னதான் தலை கீழாக நின்றாலும் புற்று நோய்போல் படர்ந்துள்ள இனவாதம் முற்றாக ஒழிக்கப்படாத வரை இலங்கை மக்கள் சமாதானத்தைக் காண்டு கொள்ள முடியாது.

இந்த வகையில் பார்க்கும்போது இனவாதத்தை ஒழித்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் அதற்கான பாரியதொரு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படாத வரையில் எவரும் சமாதானத்திற்கு அருகில் செல்ல முடியாதென்பதே உண்மையான விடயமாகும்.இன்று ஒவ்வொரு இனங்களுக்கிடையிலும் குழப்பமான நிலைமைகளே தோற்று விக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சாரார் தமது இனவாதச் செயற்பாட்டை வெற்றிகரமாக நகர்த்திச் செல்வதற்கு வழியேற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச நிதி உதவிகளும், பேரினவாத அரசியல் வாதிகளின் அதீத ஆதிக்கமும்; தீய செயற்பாட்டாளர்களைத் தூண்டி இன்று கட்டுப்பாடற்ற வன்முறைகளுக்கும், இனவிரிசல்களுக்கும் வழி வகுத்துள்ளது. மேற்படி நிலைமைகள் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது தொடரப்பட்டாலும் அது முழு இலங்கை மக்களையும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அது இலங்கையின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் இழுக்கினையே சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது.

அதுமட்டுமல்லாது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி வருவதையும் தற்போதைய செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன.  இன்று அரசு இனங்கள் மீதான பேரிவாதத்தின் காட்டுமிறாண்டித் தனச் செயற்பாடுகளையும் அவற்றின் அட்டூழியங்களையும்  கண்டு கொள்ளாதிருப்பதானது எதிர் காலத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கும், இறுக்கங்களுக்கும் பதில் சொல்ல வேண்டியதொரு நெருக்கமான காலத்தை நோக்கிச் செல்வதாகவே அரசியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இனவாதம் ஒரு சமயத்தை தாக்கிவிட்டு வெற்றி கொண்டு விடலாம் என்ற நப்பாசையின் தோற்றுவாயில் மிதக்கின்றனரே தவிர பின்னால் ஏற்படவிருக்கும் ஆபத்தான ஒரு நிலைமையை கண்டு கொள்ளாதிருக்கின்றனர்.இலங்கையின் இனவாதம் ஒவ்வொரு சிறபான்மை மக்களினதும் அரசியல், பொருளாதார மற்றும் மத விவகாரங்களில் நேரடியாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலைமைகளை கடந்த கால அனுபவங்கள் மூலமாக காணக் கூடியதாகவுள்ளது.

இதற்குக் காரண கர்த்தாக்களாக ஒவ்வொரு சிறுபான்மைச் சமுகங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் தமைகளும், அரசியல் வாதிகளுமேயாகும்.இவர்களுக்கிடையில் ஒற்றுமையற்ற தன்மைகளும், போட்டித் தன்மைகளுடன் கூடிய சுகபோகங்களுமே பேரினவாத்திற்கு சிறுபான்மைச் சமுகங்களை ஆலையில் இட்ட கரும்பாக நசுக்குவதற்கு வழி வகுத்துவிட்டது எனலாம். , சமுகங்களினதும் நலன்களில் அக்கறை உடையவர்களாகவும் உண்மையான மக்கள் சேவகனாகவும் இருந்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள இனவாதம் ஏற்பட்டிருக்காது என்பதே மக்களின் நம்பிக்கையாகும்.எனினும் சிறுபான்மை அரசியல் வாதிகள் பெரும்பான்மை அரசியல் ஆளுமைகளுக்கு அடிபணிந்து அவர்கள் போடும் பிச்சைகளுக்கு முட்டுக்கால் இட்டு வந்த நிலைமைகளே இலங்கையின் இனவாதத்திற்கும், சமுகங்களினதும், சமயங்களினதும் பிரிவினைக்கும் வழி சமைத்துவிட்ட நிலைமைகளை கடந்த கால அரசியல் அனுபவங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.  

இலங்கையில் தமிழராக இருக்கட்டும் முஸ்லிம்களாக இருக்கட்டும் அவர்கள் இந்த நாட்டில் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தி விடுவார்கள், அவர்கள் பெரும்பான்மையை விஞ்சிவிடுவார்கள் என்ற பீதியின் பிரதிபலிப்புக்களே சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் ஏற்பட்டுள்ள இனவா சூழலாகும். சிறுபான்மையாக காணப்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகம் பெரும்பான்மைக்கு விலை போகாமல் நிதானமாக சிந்தித்து ஒற்றுமைப்பட்டிருந்தால் இன்று இலங்கையின் வரலாறு சமாதானத்தை நோக்கியதான சிறுபான்மை மக்களின் தேவைகளை பெறக்கூடிய ஒரு அமைதியான இலங்கையை நோக்கிச் சென்றிருக்கும் எனலாம். இவ்வாறு இனவாதங்கள் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்று தஸாப்த கால யுத்துமும் அதன் தாக்கமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன் காரணமாக மக்கள் பட்ட துன்ப துயரங்களும், ஏற்பட்ட இழப்புக்களும் தொடர்ந்தும் ஏற்படுவதை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகள் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளால் மட்டுமல்லாது பல தரப்பட்டவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு சமாதானத்திற்கான கருத்துக்களும், முனைப்புக்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை அனைத்துமே புஷ்வானமான விடயமாக யாருக்கும் பயனற்ற செயற்பாடுகளாக ஆகிவிட்டது.மேற்படி சமாதன முனைப்புக்கள் இலங்கை வாழ் சகல சமுகத்தினதும் நலன்களின் அடிப்படையிலேயே மேற் கொள்ளப்பட்டன.

எனினும் ஒரு சில பேரினவாதம் அதனை சிறுபான்மையே முற்றுமுழுதாக அனுபவிக்கப் போகின்றது என்ற நோக்கில் பல தடைகளைப் போட்டு அவற்றை முன்னெடுத்துச் செல்லவிடாது தடுத்த நிலைமைகளே இலங்கையின் இன்றைய சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட வேண்டிய காரணங்களில் ஒன்றாகவும் அமைந்து விட்டது.இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் உணர்வலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமேயுள்ளன இவ்வாறு அதிகரித்துச் செல்லும் உணர்வலைகளை அரசாங்கம் எத்தனை நாளைக்குத்தான் புறந்தள்ள முடியும்?. என்பதற்கிடையில்  தொடரான அலட்சியப் போக்குகள் பிரிவினையை மேலும் அதிகரிக்கவும் அதன் எதிர்ப்பலைகளை வழுவூட்டவுமே செய்யும். இதன் ஒரு கட்டமே இன்று சிறுபான்மை மக்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளாகும். இவ்வாறு இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமையும் பிரிவினைவாத செயற்பாடுகளால் நாட்டின் ஆட்சியமைப்பு பலவாறாக உடைவதற்கும், ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. இனவாதிகளின்  தீய செயற்பாடுகள் நாட்டின் சமாதானத்தினை அழிக்க வல்லவனாக தோற்றம் பெறுவதுடன் ஆட்சியாளர்களை ஆபத்துக்கள் சூழ்ந்த காலத்தை நோக்கி கொண்டு செல்கின்றது எனலாம்.

இவ்வாறு இனவாதத்திற்கு உந்துதல் அளிப்பவர்கள்  வீரவசனம் பேசி நாட்டை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்வதற்கு முன்னர் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டியதொரு தருணமாகும். சமாதானத்தை  விரும்புபவர்களுடன் இணைந்து ஆட்சியாளர்கள் யதார்த்தத்தை உணர்ந்து புத்திசாலித் தனமாக தமது காய்களை நகர்த்தி எதிர் கொண்டு வரும் ஆபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதே சிறந்ததாகவுள்ளது.   இல்லாவிட்டால் மேற்படி இனவாதிகள் மேலும் மேலும் சர்வதேசத்தினதும், வல்லரசுகளினதும் பணத்திற்கும், அவர்களின் வலைப் பின்னலுக்கும் துணைபோய் தமது காரியங்களை சாதித்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் இலங்கையின் இறையான்மையில் பல நாடுகள் இன்று தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதுடன் மீண்டும் ஓர் அந்நியர் ஆட்சியை இலங்கையில் ஏற்படுத்தினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.  காரணம் அரசாங்கம் உள்நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் காட்டும் கரிசனையே மேற்படி நிலைமைகளை இலங்கையில் தோற்றுவிக்க வழிகோலலாம்.  இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்திற்கு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதே பிரதான காரணங்களாகும். பல்லின சமுகங்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு இனத்தை அல்லது ஒரு சமுகத்தை மட்டும் பிரதிபலிக்கும் விடயங்கள் இனங்களுக்கிடையில் நிச்சயம் முறுகள் நிலைமைகளையும், பிரச்சினைகளையுமே தோற்றுவிக்கும் அந்தவகையில்தான் இலங்கையின் இனவாதக் கொள்கைகளும், அதனை கடைப்பிடிப்பவர்களும் தோற்றம் பெறுவதற்கு காரணமானக அமைந்துவிட்டது. உண்மையில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்படாதிருப்பின் இன்று பெரும்பான்மை சிறுபான்மை என்ற கருத்துக்கள் வளர்ந்திருக்காது மாறாக அனைவரும் இலங்கையர் என்ற கொள்கைப் பிரகடனம் நிஜமாகவே மலர்ந்திருக்கும். ஆனால் இன்று பேச்சளவில் மட்டுமே அனைவரும் இலங்கையர் என்ற கொள்கைக்குள் சொல்லப்படுகின்றனரே தவிர உண்மையான மனத்திருப்தியுடனான வாசகம் காணப்படவில்லை.

இலங்கையில் சமாதானம் மலர வேண்டுமானால் இனவாதம் என்ற அரக்கனை ஒழித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் பூரண அதிகாங்களை அரசாங்கமே கொண்டுள்ளது. இதனால் அரசாங்கத்தைத் தவிர வேறு எவராலும் சமாதானத்தை ஏற்படுத்திற் கொள்ள முடியாது என்பதே தற்போதைய இலங்கையின் நிலைப்பாடாகும்.

SHARE