எனது அண்ணன் மகேஸ்வரனை கொன்றது புலிகளே – நான் அரசியல் பேசவில்லை – துவாரகேஸ்வரன் அதிரடி பதிவு!

182

 

எனது சகோதரரான முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை புலிகள் தான் சுட்டுக் கொன்றார்கள். இதை நான் உறுதிபடக் கூறுகின்றேன். எனக்கு அரசியல் இலாபம் தேவையில்லை என்று புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகலாவின் கணவரும் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் அவர் இறந்த காலத்திலிருந்து பெரும் சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில் அதன் பங்கு யாருடையது என்ற உண்மை நிலை அரசியல் காரணங்களுக்காக மனைவி விஜயகலாவால் இதுவரை இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்தாலும் அதன் உண்மைநிலையை மகேஸ்வரனது சகோதரர் துவாரகேஸ்வரன் தனது முகநூல் பதிவில் மீண்டும் ஒருமுறை தெளிவாகப் பதிவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்தவாறு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பிரானவர்தான் அமரர் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன்.

இவரது வரவு விடுதலைப்புலிகளுக்கு விரோதமானதாக அமைந்திருந்தது. இதனால் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பருதியால் எச்சரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர் மகேஸ்வரன்.

விறி யான மகேஸ்வரன் சிறிது காலத்தில் யாழ் மாவட்டத்தில் தனது வியாபார தளத்தை விரிவாக்கினார். இது புலிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் பார்வையில் துரோகியாக துரத்தப்பட்டார் மகேஸ்வரன்.

ஆனாலும் தான் எப்படியும் அரசியல் பிரதிநிதியாக வரவேண்டும் என நினைப்புக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டார் மகேஸ்வரன். இதனால் புலிகளின் புலனாய்வு துறையினராலும் அரசியல்துறை பொறுப்பாளராலும் பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டார் .

தொடர்ந்தும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்தமையால் மகேஸ்வரனுக்கு உயிர் அச்சுறுத்தலை புலிகள் விடுத்திருந்தனர். ஆனாலும் புலிகளுக்கு சவால் விடுத்து தனது தேர்தல் களத்தை கொழும்புக்கு மாற்றினார் மகேஸ்வரன்.

கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டார் மகேஸ்வரன். தேர்தலுக்காக கொழும்பில் பிரசாரங்களை மேற்கொண்டபோது புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதில் மகேஸ்வரன் காயங்களுடன் உயிர்பிழைத்தார். இருந்தும் புலிகளின் அனைத்து எதிர்ப்பையும் மீறி கொழும்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார் மகேஸ்வரன். இதனால் புலிகளின் அதிமுக்கிய துரோகியானார் மகேஸ்வரன்.

இந்நிலையில் புலிகள் மகேஸ்வரனை சுட்டுக்கொல்ல தனது புலனாய்வு உறுப்பினரான யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜோன் வலன்ரயன் அல்லது வசந்தன் என்பவரை கொழும்புக்கு அனுப்பி கொலை செய்வதற்கான களத்தை வகுத்தனர்.

ஆனாலும் கொலைப் பழி தம்மீது விழுந்துவிடாது இருப்பதற்கான தெரிவுகளை மிக கச்சிதமாக உருவாக்கினார்கள் புலிகள். இதற்கு அன்றைய கால அரசியல் நகர்வுகளும் புலிகளுக்கு சாதகமாக அமைந்தது.

இந்நிலையில் அன்றைய அரசாங்கத்தை மகேஸ்வரன் கடுமையாக விமர்சித்து வந்தமையால் அவருக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் எண்ணிக்கை 17 இலிருந்து 2 ஆகக் குறைத்தது. இதுவும் புலிகளுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் என்னும் அரசியல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவந்தது. மகேஸ்வரன் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் கொல்லப்படுவதற்கு பின்னணியில் அரச இராணுவமும் அதன் புலனாய்வாளர்களுமே உள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் சக்தியின் மின்னல் நிகழ்ச்சி நேர்காணலில் தெரிவித்திருந்ததுடன் அன்றைய அரசாங்கத்தையும் மகேஸ்வரன் கடுமையாகவும் விமர்ச்சித்திருந்தார்.

மகேஸ்வரனின் கொலைக்கான பழியை தம்மீது விழவிடாது தருணம் காத்திருந்த புலிகளுக்கு அவர் சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்வில் கூறிய கருத்துக்கள் சாதகமாக அமைந்தன.

இந்நிலையில் மகேஸ்வரனை சுட்டுக் கொல்ல காத்திருந்த புலிகளின் புலனாய்வு உறுப்பினரான ஜோன் வலன்ரயன் அல்லது வசந்தன் மகேஸ்வரனின் கொழும்பு அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அங்கு பணிபுரிந்தவர்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்கத் தொடங்கினார்.

அதுமட்டுமல்லாது மகேஸ்வரனின் மனைவி விஜயகலாவுடனும் நெருங்கிய உறவை அதுவும் மகேஸ்வரன் இல்லாத நேரங்களில் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இதனால் மகேஸ்வரனது தரவுகள் புலிகளின் உளவாளியான ஜோண் வலண்டயனுக்கு இலகுவாக கிடைத்தது.

ஆனால் அந்த நெருக்கம் விஜயகலாவுக்கும் கொலையாளி ஜோன் வலன்டயன் அல்லது வசந்தன் என்பவருக்கும் வேறுவிதமாக மாறியதாகவும் இதனால் மகேஸ்வரனுக்கும் விஜயகலாவுக்கும் இடையே கடும் பிரச்சினை ஏற்பட்டிருந்ததாகவும் அரசல்புரசலாக செய்திகள் மகேஸ்வரனின் கொலைக்கு பின்னர் வெளியாகியிருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது பிள்ளைகளுடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொழும்பு கொட்டாஞ் சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.

ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரியான புலிகளின் புலனாய்வாளர் ஜோன் வலன்ரயன் அல்லது வசந்தன் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.

இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் மேலும் 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

மகேஸ்வரனை கொலைசெய்த சம்பவம் தொடர்பாகக் கைதான முக்கிய நபரான புலிகளின் புலனாய்வாளர் வசந்தன் என அழைக்கப்படும் ஜோன்சன் வலன்டயன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2012 ஓகஸ்ட் 27 ஆம் திகதி மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகளும் விசாரணை அறிக்கைகளும் உறுதி செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார். அத்துடன் இதில் மகேஸ்வரனின் மனைவி விஜயகலாதான் அந்த கொலையாளியுடன் இறுதியாக பேசியது எனவும் குறித்த கொலைக்கும் விஜயகலாவுக்கும் தொடர்பிருந்ததாகவும் செய்திகள் தடல்புடலாக வெளியாகி இருந்தன.

சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சிக்கு மகேஸ்வரன் வழங்கிய நேர்காணல்தான் மகேஸ்வரனது கொலைக்கு காரணம் எனவும் அதை திசை திருப்பி உடனடியாக செய்திகளை புலிகளுடன் நெருக்கமான ஊடகங்கள் சொல்ல அதுவே உண்மை என மக்களும் நம்பிக்கொண்டனர்.

இதனால் கொலையின் உண்மை நிலைப்பாடு அரசியல் பலத்தால் வெளிவரத் தாமதமாகியது. இவற்றை எல்லாம் மறைத்து தனது அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவருகிறார் விஜயகலா.

இந்நிலையில் தனது சகோதரனை கொன்றவர்களுடன் உறவை வைக்க வேண்டாம் என்றும் அவர்கள் தொடர்பில் தேர்தல் காலங்களில் மட்டுமல்ல என்றும் பேசவேண்டாம் என்றும் அண்ணி விஜயகலாவை மைத்துனர்கள் பலமுறை எச்சரித்து வந்ததுடன்  அத்தகைய செயற்பாடுகளால் தமது குடும்ப மானம் போவதாகவும் மகேஸ்வரனது சகோதரர்கள் அண்ணி விஜயகலாவிடம் கோரியுள்ளனர். இதில் துவாரகேஸ்வரன் சற்று அதிகமாக அவரை எச்சரித்தும் உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகலா நல்லூரில் வைத்து துவாரகேஸ்வரனுக்கு அசிற் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தார். இதில் மயிரிழையில் சில காயங்களுடன் உயிர் தப்பினார் துவாரகேஸ்வரன். இச்சம்பவத்தையும் அன்று துவாரகேஸ்வரன் தனது அண்ணியே செய்தது என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இவ்வாறு வெளிப்படையாக தகவல்களை கூறிவரும் துவாரகேஸ்வரன் இன்று தனது அண்ணியான விஜயகலா தனது அரசியலுக்காக புலிப்புராணம் பேசுவதை விரும்பவில்லை.

இதனால் தனது அண்ணி சர்ச்சைக்கு உள்ளாகி பதவி இழந்த பின்னரும் விஜயகலா செயற்பாடுகள் தவறானது எனவும் எனது சகோதரனை கொன்ற புலிகளை நான் என்றும் ஆதரித்தது கிடையாது. புலிகளது குட்டுக்களை அம்பலப்படுத்தியமையால் தான் எனது சகோதரர் யாழ்ப்பாணத்திலிருந்த அரசியல் செயற்பாடுகளை கைவிட்டு கொழும்புக்கு சென்றிருந்தார்.

இதன்பின்னர் அவர் கொழும்பிலிருந்து செயற்பட்டமையால் புலிகள் அவரை கபடமான முறையில் சுட்டுக் கொன்றனர் என தனது முகநூலில் வெளிப்படையாக பதிவிட்டுள்ளமையானது துவாரகேஸ்வரனின் உண்மை தன்மையை வெளிக்காட்டியுள்ளதுடன் விஜயகலாவின் பொய் முகமும் அம்பலமாகியுள்ளது.

ஆக தனது அழிந்துபோன அரசியல் வாழ்க்கைக்கு மறு உயிர் கொடுக்க பாடுபடும் விஜயகலா அதற்கான அஸ்திரமாக புலிப்புராணத்தை கையிலெடுத்து சர்ச்சைக்குள்ளாகி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அரசியல் பதவியைவிட எமக்கு குடும்ப மானமும் உண்மையுமே அவசியம் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது உண்மையை சொல்லும் துவாரகேஸ்வரனின் வெளிப்படைத் தன்மையே இன்றுள்ள தமிழ் தேசியவாத அரசியல் தரப்பினருக்கு அவசியமானதாகும்.

SHARE