அமெரிக்காவை மிரட்டினால் பேரழிவை சந்திக்க நேரிடும் – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

184
அமெரிக்காவை மிரட்டினால் பேரழிவை சந்திக்க நேரிடும் - ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவை மிரட்டினால் வரலாற்றில் காணாத பேரழிவை சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
 அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசும்போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார்.

அவர் கூறுகையில், “நீங்கள்(டிரம்ப்) சிங்கத்தின் வாலை(ஈரான்) பிடித்து விளையாட வேண்டாம். இதற்காக பிறகு நீங்கள் மிகவும் வருத்தப்படவேண்டி இருக்கும். ஈரான் சமாதானத்தின் தாய். எனவே எங்களுடன் சமாதானமாக செல்லுங்கள். மாறாக ஈரானுடன் போரிட்டால் ஈரான் போர்களின் தாய் என்பதை உங்களுக்கு உணர வைக்கும்” என்று எச்சரித்து இருந்தார்.

இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரும் தகுந்த பதிலடி கொடுத்தார். இதுபற்றி டுவிட்டரில் டிரம்ப் ஈரானிய அதிபருக்கு அளித்துள்ள பதிலில், “இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கமாக டிரம்ப், தனது அன்னிய நாடுகளின் தலைவர்களுக்கு டுவிட்டரில் பதில் அளிக்கும்போது ஆங்கிலத்தின் சிறிய வடிவ(சுமால்) எழுத்துகளையும் கலந்து எழுதி பதிவு செய்வது வழக்கம். ஆனால் டிரம்ப் இந்த எச்சரிக்கை வாசகங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தின் பெரிய வடிவ(கேபிட்டல்) எழுத்துகளில் எழுதி தனது பதில் மிக வன்மையானது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, கலிபோர்னியாவில் நடந்த ஈரானிய-அமெரிக்கர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, “ஈரானிய தலைவர்கள் அரசாங்கம் நடத்தவில்லை. அவர்கள் மாபியா கும்பல் போல் ஆட்சி நடத்துகின்றனர். ஊழல் செய்வதிலும், சொத்துக்களை குவிப்பதிலும்தான் குறியாக இருக்கின்றனர். ஈரான் நாட்டு மக்கள் எந்த திசையில் தங்கள் நாடு செல்லவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும். அதுபோன்ற சூழ்நிலையில் ஈரானிய மக்களின் குரலுக்காக அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும்” என்று குறிப்பிட்டார்.

SHARE