யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்ட தூரம் பயணங்களில் ஈடுபடும் 52 பேருந்துகளுக்கு அனுமதி பத்திரம் இல்லை-யாழ்.பேருந்து சங்க தலைவர் தங்கையா ஈஸ்வரன் தெரிவிப்பு.

171

அண்மைக்காலமாக ஏ9 வீதியில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்ட தூரம் பயணங்களில் ஈடுபடும் 52 பேருந்துகளுக்கு அனுமதி பத்திரம் இல்லை என யாழ். பேருந்து சங்க தலைவர் தங்கையா ஈஸ்வரன் தெரிவித்துள்ளர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அமைச்சிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மாதாந்தம் 52 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அரசாங்கம் இழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நிலவும் சட்டத்திற்கமைய வீதி அனுமதி பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியால் 2 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் அபராதமாக செலுத்த நேரிடும் என அவர் கூறியுள்ளார். இதன் ஊடாக பாரிய பணம் மோசடி இடம்பெறுகின்றமையினால் இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வீதி அனுமதி பத்திரம் உள்ள பேருந்துகள் மாதம் 91000 ரூபாவுக்கும் அதிக பணம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்திள்ளது. இவ்வாறான நிலையில் முறையான அனுமதி பத்திரம் இன்றி பேருந்துகள் செலுத்தப்படுவதால் தான், அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE