வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமான கல்நாட்டினகுளத்தில் மீள்குடியேறும் 50 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது. 1977,1983,1990களில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்களினபோது இந்தக்கிராமத்திலிருந்து மக்கள் முற்றாக வெளியேறியிருந்தார்கள். இந்த நிலையில் இவர்களை மீள்குடியேற்றும் முகமாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியுதவியுடன் 50 வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று (10.08) நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்டத்திற்கான 43ஆவது வீட்டுத்திட்டம் இதுவாகும். இவ்வருட இறுதிக்குள் 100 வீட்டுத்திட்டங்களை முடிப்பதற்கான நடவடிக்கைகள் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கல்நாட்டினகுளம் மருதநிலம் இயற்கைச் சுற்றுலா மையத்தில் நடைபெற்ற கூட்டத்தினை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக மூன்று வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. முத்தமிழ் சனசமூக நிலையத்தின் தலைவர் தாவீதுசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மா.ச.உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் உத்திரியநாதன்இ வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம மக்களென பலரும் கலந்துகொண்டனர்.