தளர்த்தப்பட்ட தடை மன்னார் மனித புதை குழி  ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க  அனுமதி –   சட்டத்தரணிகள் ஊடாக நகர்தல் பிரேரனை தாக்கல்

141
(மன்னார் நகர் நிருபர்)
 
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஊடகவியலாளர்கள் அங்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நீதிமன்றத்தினால்   கட்டளை பிரப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் ஊடகவியலாளர்கள் இருவர் இன்று (10) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஊடாக நகர்தல் பிரேரனையை தாக்கல் செய்திருந்தனர்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் B 232 / 2018கொண்ட வழக்குடன் சம்மந்தப்பட்ட அகழ்வு மேற்கொள்ளும் பூமியில் உட்பிரவேசித்தல், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஒளிப்பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நீதிமன்றத்தினால் கடந்த 7 ஆம் திகதி கட்டளை பிரப்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கான அறிவித்தல் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் வளாக பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களான எஸ்.ஆர்.லெம்பேட் மற்றும் பெலிஸ்டஸ் பச்சேக் ஆகியோர் சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஊடாக இன்று (10) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, நகர்த்தல் பிரேரனை தாக்கல் செய்தனர்.
இவ்விடயம் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நகர்தல்  விண்ணப்பத்தை   மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருந்தார்.
சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தலைமையில் சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வர்,ஜெபநேசன் லோகு,செல்வராசா டினேசன் ஆகியோர் ஊடகவியலாளர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன் போது குறித்த கட்டளையில் தவறுதலான விடயம் இடம் பெற்றுள்ளதை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
அதற்கு அமைவாக நீதவான் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் பகுதியில் காலையும், மாலையும் ஊடகவியலாளர்கள் செல்லலாம் என்றும் ஊடகவியலாளர்கள் எந்த வித இடையுறுகள் இன்றி செய்தி சேகரிப்பது அவர்களுடைய உரிமை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம் பெறும் இடத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட, அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த பகுதிக்கு சென்று தமது கடமையை செய்ய முடியும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
SHARE