தெல்லிப்பழைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளைக் கும்பலின் அட்டகாசம் கடந்த இரண்டு நாற்களாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டாரைத் தாக்கிப் பெருமளவு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர் என்று தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், தெல்லிப்பழையில் நடந்த இந்தச் சம்பவம் மக்களை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது.
தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கதவுகளை உடைத்துக் கொண்டு 8 பேர் கொண்ட குழுவினர் வீட்டினுள் புகுந்தனர். அவர்கள் கைக்கோடரி, கொட்டன் போன்ற ஆயுதங்களால் வீட்டாரைத் துரத்தித் தாக்கினர். காயமடைந்த அவர்கள் ஓடிச்சென்று வீட்டின் ஒரு அறையைப் பூட்டி அதனுள் பதுங்கினர்.
அதன் பின்னர் வீட்டின் சாமி அறைக் கதவு கொள்ளையர்களால் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த 12 பவுண் நகைகள் அபகரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதியிலேயே மேலும் மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காட்டிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் அது பற்றிய விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினமும் தெல்லிப்பழையில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். முகத்தை மூடிக்கட்டியவாறு கொள்ளையடிக்கும் நோக்கில் அவர்கள் உலாவியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அளவெட்டி, பன்னாலை, கொல்லன்கலட்டி போன்ற பகுதிகளில் கொள்ளையர்களின் நடமாட்டம் இருந்தது என்று மக்கள் தெரிவித்தனர்.
கடந்த சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் வன்முறைகள் கட்டவிழித்து விடப்பட்டுள்ளன. வாள்வெட்டு முதல், திருட்டு, வழிப்பறி வரை அது அதிகரித்தே செல்கிறது. பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்கின்ற போதும், சம்பவங்கள் நிறுத்தப்பட்டதாத் தெரியவேயில்லை, இது மக்கள் மத்தியில் மேலும் அச்சுறுததலை ஏற்படுத்தியுள்ளது.