பிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
கீத் நொயாரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
தாம் குறிப்பிடும் ஓர் நாளில் விசாரணைகளில் சமூகமளிப்பதற்கு தயாராக இருக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எழுத்து மூலம் மஹிந்த ராஜபக்சவிடம் அறிவித்துள்ளனர்.
கீத் நொயார் தாக்குதல் குறித்த விசாரணைகளில் சமூகமளிக்குமாறு நான்கு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அறிவிப்பிற்கு மஹிந்த உரிய பதிலளிக்காத காரணத்தினால் இவ்வாறு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் அறிவிக்கும் தினத்தில் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
கீத் நொயாரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னதாக சபாநாயகர் கருஜயசூரியவிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் மஹிந்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
தி நேசன் பத்திரிகையின் பிரதி ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளுக்கு ஆயத்தமாகுமாறு கடந்த 13ம் திகதி மஹிந்தவிற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.