வவுனியாவில் இளம் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு! தேடி வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

143

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சடலங்களும் இன்று காலை 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 33 வயதுடைய மயூரன் ராஜினி மற்றும் அவரது 4 வயது மகனான மயூரன் சஸ்வின் என்போரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் அவர்களது முன் வீட்டின் முன்னால் உள்ள கிணற்றில் இருந்தே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்,

“எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார்.

இருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர். இதன்போது வீட்டில் இருந்த ரொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள்.

அவர்கள் வீட்டில் இருக்கும் போது நான் அயலில் இருந்த கடைக்கு சென்று விட்டேன். 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டேன்.

அப்போது அவர்களை காணவில்லை. சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 9 வயது சிறுவன் “அம்மா நிற்கிறாவா?” என தேடி வந்தான்.

இதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டோம்” எனத் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE