இந்திய அணி விராட் கோஹ்லியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயமல்ல. திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர் என்று இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலிரு போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இதனால் இந்தியா முழுக்க முழுக்க விராட் கோஹ்லியை நம்பியே இருக்கிறது. அவர் தனியொரு இராணுவமாக அணியில் இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவானாக விளங்கியவருமான சங்கக்கார, இந்திய அணி கோஹ்லியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கக்கார மேலும் கூறுகையில், கடந்த சில வருடங்களாக விராட் கோஹ்லி துடுப்பெடுத்தாடி வருவதைப் பார்க்கையில் அவருடன் மற்ற துடுப்பாட்ட வீரர்களை ஒப்பிடுவது நியாயம் அல்ல.
அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் இருக்கும். சிறந்த திறன் அவரிடம் இருக்கிறது. ஆனால், மற்ற வீரர்களும் சிறந்தவர்களே.
புஜாரா, ரஹானே ஆகியோர் உண்மையிலேயே சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்தான். புஜாரா டெஸ்டில் 50 க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். ரஹானே வெளிநாட்டில் 50 க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.
மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களே.
முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சளைத்தவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.