கடும் வரட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 20,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அம்பாறை மாவட்ட மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பௌஸர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான கால நிலையினால் பாதிக்கப்படுபவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தற்போது பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, தமண, லாகுகல ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சுமார் 6,248 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு பிரதேச செயலகங்களினூடாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், பிரதேச செயலகங்கள் இப்பணியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
வரட்சிப் பிரதேச மக்களின் தேவைக்கேற்ப பௌஸர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. இப்பணிக்கு உள்ளுராட்சி சபைகளும் நிறைவான ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.
இதேவேளை, வரட்சி காரணமாக கிழக்கு மாகாணத்;திலுள்ள பெரிய, சிறிய குளங்கள், ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என்பனவற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
வரட்சி காரணமாக காட்டு மிருகங்களும் குடிநீரின்றிப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய வரட்சிக் காலநிலை தொடருமானால், எதிர்வரும் பெரும்போக நெற்செய்கை வெகுவாகப் பாதிக்கப்படும் என அம்பாறை மாவட்ட விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சிறுபோகத்தின் போது, மட்டுப்படுத்தப்பட்டளவு காணிகளிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடைப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை, வரட்சி, குடிநீர், காட்டுமிருகங்கள்