நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 15ம் திகதி ஆரம்பமான மஹோற்சவம் பெருந்தொகையான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நல்லூர் ஆலய உற்சவத்தில் பங்கேற்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் ஆரம்பகட்ட நிகழ்வின் போது சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்களும் இணைந்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
திருவிழாவின் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் 700 பொலிஸார் பல பிரிவுகளாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகளவு பக்தர்கள் பங்கேற்கும் நிலையில், கொள்ளைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை கண்காணிக்க ஆலயத்தைச் சுற்றி 32 கமராக்கள் கண்காணிப்பு நடவடிக்கைக்காக பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பொலிஸாரினால் பாதுகாப்பு கமரா கட்டமைப்பு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நல்லூர் ஆலயத்தின் தேர்த்திருவிழா அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் ஆலய வளாகத்தில் கூடவுள்ளனர் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.