மாகாண சபை தேர்தல் தற்போதைய சூழலில் நடைபெறாமல் இருப்பதற்கான சாத்தியமே உள்ளது. மாகாண சபைக்கு பதிலாக அரசாங்கம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தல்களை நடத்தாமல் இருக்கின்றது.
அரசாங்கம் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மாகாண சபை தேர்தலுக்கு முன்பதாக அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிப்பதாக தெரிகின்றது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்கு பின்னர் எந்த வேளையிலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனவே 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படலாம்.
இவ்வாறு நான் கூறுவதற்கு அடிப்படைக் காரணம் உள்ளது. அதாவது கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் எமது கட்சி பாரிய வெற்றியீட்டியது. அதேபோன்று எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெறுவது நிச்சயமாகும். அப்படியாயின் எமது கட்சி மாகாண சபை தேர்தலில் வெற்றியீட்டும் பின்னணியில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு போகுமா?
அதனால் அவ்வாறான ஒரு வாய்ப்பை எமக்கு வழங்காமல் அரசாங்கம் நேரடியாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகின்றது. அதாவது தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்தி அதில் நாங்கள் வெற்றிபெறும் சூழலில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லாது என்பது எனது வாதமாகும்.
அதனால் அரசாங்கம் தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும் சாத்தியமே காணப்படுகின்றது. இதேவேளை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறியே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஆனால் ஜனநாயகத்தின் முக்கிய பண்பான தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுவருகின்றது என்றார்.
மாகாண சபை தேர்தலை புதிய முறைமையில் நடத்தும் நோக்கில் கடந்த வருடம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் 50 வீதம் தொகுதி முறைமையிலும் 50 வீதம் விகிதாசார முறைமையிலும் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கேற்ற வகையில் எல்லை நிர்ணய குழுவும் நியமிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் புதிய தேர்தல் முறைமையானது சிறுபான்மை மக்களுக்கு பாதகமாக அமைவதாக சிறுபான்மை கட்சிகள் எதிர்த்துவருவதுடன் பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துமாறு கூறிவருகின்றன. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல தடவைகள் கூடிய கட்சி தலைவர்கள் இது தொடர்பில் ஆராய்ந்து இவ்வாரம் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.