நெடுந்தீவு பிரதேச மருத்துவமனைக்கு நீண்ட காலமாக நிரந்தர மருத்துவர் இன்றிச் சிரமங்களை எதிர்கொள்வதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது ஏனோதானே என்றுதான் மருத்துவசேவை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
பல ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் கூட்டப்பட்ட னவே தவிர எந்தவிதமான பலனும் இல்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தாவது:
கடந்த 14ஆம் திகதியிலிருந்து நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் பெரும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றோம். இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாது போனால் என்ன நிலைமை உருவாகும் என்பதை ஒரு கணம் உரிய தரப்பினர் சிந்திக்க வேண்டும்.
தற்காலிகமாக மருத்துவர் வேண்டாம். நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் . எமக்கான மருத்துவரை நியமிக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரனிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:
நெடுந்தீவு மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் இல்லை என்பது தொடர்பில் கொழும்பு சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வருடம்தோறும் எந்தப் பிரதேசத்தில் மருத்துவர்கள் இல்லை என்பதை விளம்பரப்படுத்துவார்கள். நெடுந்தீவில் பணியாற்ற மருத்துவர்கள் எவரும் முன்வருவதில்லை.
ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் தற்போது மீள் நிரப்பல் சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேவையை எந்தநாளும் வழங்குங்கள் என்று அவருக்கும் நாம் அழுத்தம் கொடுக்க முடியாது. இந்த நிலையில் பல்வேறு மருத்துவ மனைகள் உள்ளன என்று தெரிவித்தார்