விடுதலைப் புலிகளை தோற்கடித்த போர் தொடர்பில் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் இரண்டாவது நூலான “கடுல் எத்து” வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
குணரட்னவை போன்று, விடுதலைப் புலிகளை தோற்கடித்த போர் தொடர்பில் இலக்கியங்களை படைக்க வேண்டும். முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அத்துடன், போரை வெற்றி கொண்ட படையதிகாரிகள், மனித உரிமைகள் மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பார்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன குறிப்பிடுகையில், இது போரில் அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவரின் கதையை மையப்படுத்தியுள்ளது.
இவ்வாறான படைவீரர்கள் இல்லாமல் அதிகாரிகளால் மாத்திரம் போரை வெற்றி கொண்டிருக்க முடியாது என்ற காரணத்திற்காகவே இந்த நூலை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.