இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல்யாப்பை பெற்றுத்தருவதற்கு இந்தியா உதவிபுரியவேண்டும். அதற்கான அழுத்தங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடையுமானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உருவாவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய சென்றுள்ள சர்வக் கட்சிக்குழு நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.