அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார்: ஜேர்மனி

194

ஏற்கனவே ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுடன் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது இத்தாலியுடனும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல வார பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இத்தாலியுடன் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கையெழுத்தாக உள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் Horst Seehofer நேற்று தெரிவித்தார்.

இத்தாலியுடனான ஒப்பந்தம் முடிவாகிவிட்டது, அதில் இன்னும் இரண்டு கையெழுத்துக்கள் மட்டுமே போடப்பட வேண்டும், ஒன்று எனது இத்தாலிய சகாவுடையது, இன்னொன்று என்னுடையது என்றார் Horst Seehofer.

அகதிகள் தாங்கள் முதலில் வந்திறங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டது என்றே கருதலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இத்தாலியின் உள்துறை அமைச்சரான Matteo Salviniயும் Seehoferம் இன்று Viennaவில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டம் ஒன்றில் பங்கேற்கின்றனர்.

Seehofer பதவியேற்ற நாள் முதலே புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலுடன் மோதல் போக்கு ஏற்பட்டு பின் ஒரு வழியாக புலம் பெயர்தல் விதிகள் கடுமையாக்கப்பட முடிவு செய்யப்பட்டது.

அகதிகள் மீட்பு படகுகளை தனது துறைமுகத்தில் அனுமதிக்காத நிலைப்பாட்டை எடுத்த இத்தாலியும் Seehoferஇன் மனப்பாங்கையே கொண்டிருந்த நிலையில் இரு நாடுகளும் இணைந்து அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE