இந்தோனேசியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் சிக்கி 49 நாட்களாக கடல் நீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த Aldi Novel Adilang என்ற 19 வயது இளைஞர், வடக்கு சுலாவேசி கடற்கரை பகுதியிலிருந்து 125 கிமீ தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார்.
அவருடைய படகிலிருந்து ஒரு நீளமான கயிறானது கொக்கியில் உதவியுடன் கடலில் அடிப்பகுதியிலும் இணைக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கேயே தங்கி அந்த இளைஞர் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 14-ம் தேதியன்று, பலத்த காற்று வீசியுள்ளது. இதில் நிலைத்து நிற்க முடியாமல் கயிறு அறுந்து, இளைஞர் நீண்ட தூரத்திற்கு அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அப்பகுதி வழியாக சென்ற பல்வேறு கப்பல்களுக்கு சிக்னல் கொடுத்ததும் கூட, எந்த கப்பலும் கவனிக்காததால் அனாதையாக இளைஞர் நடுக்கடலில் தத்தளித்துள்ளார். மேலும் தான் வைத்திருந்த சில உணவுப்பொருட்களை கொண்டு படகில் சமைத்து உணவு உண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தன்னுடைய ரேடியோவினை கொண்டு முயற்சித்த போது, அதனுடைய அதிர்வெண் அருகில் சென்றுகொண்டிருந்த கப்பலுடன் இணைந்துள்ளது.
இதனையடுத்து வேகமாக அங்கு கப்பலை செலுத்திய அதிகாரிகள் வலுவிழந்து, சோர்வாக காணப்பட்ட இளைஞரை பத்திரமாக மீட்டு ஜப்பானில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஒசாகாவில் உள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரி மிர்சா நூர் ஹிதாயத், கடலில் சிக்கி தவித்த இளைஞர் கடற்கரையிலிருந்து 2,698 கிமீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். 49 நாட்களாக அவர் கடல் நீரை மட்டுமே குடித்து வந்ததால் அவரது உடல் சோர்வடைந்துள்ளது. தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு, குடும்பத்தினரை பார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.