ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், தூர நோக்குச் சிந்தனையோடு உரை நிகழ்த்தியிருப்பதை நான் மனதார வாழ்த்துகிறேன் என பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு அந்தச் சபையில் கையாண்ட அணுகுமுறைகளை, இலங்கை மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அமைச்சர் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான 73 ஆவது அமர்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மூன்று வருடங்களில் இலங்கையை ஒரு மனிதாபிமானமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு மேற்கொண்ட படிமுறைகளை, சபை உறுப்பினர்களிடம் விளக்கிக் கூறினார்.
மேலும், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகத்திற்கு, பலஸ்தீன மக்களின் உரிமைகளைக் கையாள்வதில், இதேபோன்ற அணுகுமுறையை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
மக்கள், ஊடகம் மற்றும் நீதித்துறை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதில் இலங்கை மிக நீண்ட தூரம் பயணித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
இலங்கை எப்பொழுதும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தே வந்திருக்கின்றது. வருங்காலங்களில் பலஸ்தீன மக்களுக்குத் தீர்வு காண்பதில் வினையூக்கியாக இருப்போம் என்றும், எமது நாட்டுத் தலைவர் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் குறித்த இவ்வாறான தைரியமான சிந்தனைகளைப் பாராட்டுகின்றேன், தொடர்ந்தும் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவேன் என்பதோடு, ஜனாதிபதி மென்மேலும் பலஸ்தீன மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்.
தாய் நாட்டை நேசிக்கும் தலைவர் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிரூபித்துள்ளார்.
இதற்கு அப்பாலும் எவரும் எந்தவித கருத்துக்களையோ அல்லது விமர்சனங்களையோ தெரிவிக்க முடியாது.
பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய குறித்த இந்த உரையானது ஆழமானது என்பதுடன், நாட்டை எந்தளவுக்கு அவர் நேசிக்கிறார் என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டியும் உள்ளது.
ஜனாதிபதியுடைய இந்த உரை தொடர்பில், இலங்கையர்கள் அனைவரும் பெருமைகொள்ள முடியும்.
ஜனாதிபதியின் இந்த உரையானது மிகவும் ஆழமான பார்வையைக் கொண்டிருப்பதுடன், வரலாற்று ரீதியில் மிக முக்கியம் பெறும் உரையாகவும் அமைந்தது என்றும் அமைச்சர் மேலும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.