ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நாவில் கூறியுள்ளதை கூட்டமைப்பு ஒரு போதுமே ஏற்காது என நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப்படிக் கூறியிருப்பதன் மூலம் எமக்கு மட்டுமன்றி, சர்வதேசத்துக்கு எழுத்து மூலமாக வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் நிகழ்த்திய உரை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதி விசேட பொறிமுறை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக முன்னர் கூறியிருந்தார். இராணுவத்தினருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் வகையில் அவரது அந்த விசேட பொறிமுறை அமைந்திருந்தது.
ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதாவது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு வழங்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ஜனாதிபதியின் இந்த திட்டம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்தி இது தொடர்பில் எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியிருந்தோம்.
ஐ.நா பொது செயலாளருக்கும் ஏற்கனவே அறிவித்து, ஜனாதிபதியின் இந்த திட்டத்தை ஓர் அங்குலம் கூட நகரவிட மாட்டோம் என்று தெரியப்படுத்தி இருந்தோம்.
ஆனபடியால் இறுதி நேரத்தில் ஜனாதிபதி அந்தத் திட்டத்தை ஐ.நா பொதுச் சபையில் முன்வைக்காமல் கைவிட்டுவிட்டார்.
ஆயினும், அவர் தனது ஐ.நா உரையில், சர்வதேசத் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்றும், உள்நாட்டிலேயே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கிறோம் என்றும், அதற்கு சர்வதேசம் உதவ வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அவரது இந்தத் திட்டத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். இதனை ஒருபோதுமே ஏற்கமுடியாது. உள்நாட்டில் உள்ள சவால்கள் ஜனாதிபதிக்கு புரியாததல்ல.
தெற்கிலே இனவாதிகளின் சவாலை அவர் எதிர்நோக்கக்கூடும். ஆனாலும், அவற்றையும் முறியடிக்கும் திராணி அவரிடம் இருக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் எமது மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தார்கள்.
இன்னும் ஒன்றரை வருட காலம் இருக்கும் நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு ஜனாதிபதி முன்னின்று செயற்பட வேண்டும்.
பொறுப்புக் கூறல் விடயத்தில் உலகுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் மீறக்கூடாது. எனவே, அவர் தனது நிலைப்பாட்டை உடன் மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.