ஒரு கொள்ளைக்கார கும்பலை விரட்டிவிட்டு இன்னொரு கொள்ளைக்கார கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டோம். மீண்டும் இரண்டில் ஒரு கொள்ளைக்கார கும்பலுக்கு ஆட்சியை கொடுக்க இடமளிக்க கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்வடையும், நடுத்தர மற்றும் கஷ்டப்படும் மக்களின் பைகளில் பணம் நிறையும் என்ற வாக்குறுதிகளை வழங்கினர். நடந்து செல்பவர் மோட்டார் சைக்கிள் வாங்குவார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கார் வாங்குவார்கள் என்ற கதைகளை அரசாங்கம் கூறியது. ஆனால் இன்று நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற எவ்வாறான கொள்கையை கடைப்பிடிப்பது என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த தெரியவில்லை, வாங்கிய கடன்களில் இருந்து நாட்டினை மீட்டெடுக்க தெரியவில்லை, மேலும் கடன்களில் சிக்கும் பொருளாதார கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றனர். தேசிய வளங்களை விற்றும், நாட்டை குத்தகைக்கு கொடுத்தும் வருமானம் தேடிக்கொள்ளும் நிலைமையே இந்த அரசாங்கத்திடம் உள்ளது.
நாளுக்கு நாள் வாழ்வாதார சுமை கூடிக்கொண்டுள்ளது. விலை உயர்ந்துகொண்டே செல்கின்றது. எண்ணெய் விலை உயர்கின்றது. இவற்றை கட்டுப்படுத்த சிறந்த திட்டம் ஒன்றை அரசாங்கம் கையாள தெரியாது இருக்கின்றது. ஆனால் அரச தலைவர்கள், அமைச்சர்கள் தமது சுகபோக வாழ்க்கையை விட்டுக்கொடுப்பதாக இல்லை. மூவாயிரம் இலட்சம் பெறுமதியில் பிரதமர் சுகபோக கார் பயன்படுத்துகின்றார்.
ஜனாதிபதி பயன்படுத்தும் வாகனமும் அண்ணளவாக அவ்வாறான பெறுமதியைக் கொண்டுள்ளது. அமைச்சர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் 400 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியை கொண்டவையாகும். முன்னைய ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வதாக கூறுகின்றனர். ஆனால் இவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கும் அதிகளவிலான செலவுகள் ஏற்படுகின்றன. ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் போது 63 க்கும் அதிகமான நபர்கள் அவருடன் சென்றுள்ளனர். உறவினர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் சென்றுள்ளனர். அவர்களுக்கு மிகவும் அதிகமான தொகையை செலவழித்துள்ளனர்.
ஒரு கொள்ளைக்கார கும்பலை விரட்டிவிட்டு இன்னொரு கொள்ளைக்கார கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டோம். மீண்டும் இரண்டில் ஒரு கொள்ளைக்கார கும்பலுக்கு ஆட்சியை கொடுக்க இடமளிக்க கூடாது. இவர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் யுத்தத்தை காரணம் காட்டி தப்பித்துக்கொள்கின்றனர். யுத்தம் நிலவிய காலத்தில் நாட்டின் அபிவிருத்தியின் பின்னடைவுக்கு யுத்தம் காரணம் எனக் கூறினர். யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளை நெருங்குகின்ற நேரத்தில் இப்போதும் அதே காரணத்தை கூறியே தப்பித்துக்கொள்கின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் குறித்து எமக்கும் நம்பிக்கை இருந்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்டுவர முழுமையான உதவிகளை செய்தது மஹிந்த ராஜபக்ஷவேயாகும். பாராளுமன்றத்தில் 45 பேரைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியினால் எவ்வாறு ரணிலை பிரதமராக கொண்டுவர முடிந்தது? ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரின் வெற்றியுடன் மஹிந்த ராஜபக்ஷ மிகவும் அச்சத்துடன் இருந்தார். தமது குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் அவர் இருந்தார். 140 பேர் கொண்ட மஹிந்த அணியினர் ரணிலை பிரதமராக்கி தாம் தப்பித்துக்கொள்ள ரணிலுக்கு உதவி செய்தனர் என்பதே உண்மையாகும். ராஜபக் ஷ தப்பித்துக்கொள்ளவே ரணிலை பிரதமராக நியமித்தார். ரணில் விக்கிரமசிங்க அந்த நன்றிக்கடனை மிகச் சரியாக செய்துவருகின்றார்.