இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் அணி வெற்றிபெற்றது.
கொழும்பு சிற்றி லீக் கால்பந்தட்ட மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.
கோல்கள் இல்லாமல் முடிந்தது முதல் பாதி. இரண்டாவது பாதியிலும் அதேநிலமைதான். நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் கோல்கள் எதையும் பதிவுசெய்யாததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முடிவில் 6:5 என்ற கோல் கணக்கில் சென். நீக்கிலஸ் அணி வெற்றிபெற்றது.
நாவாந்துறையைச் சேர்ந்த இந்த இரண்டு அணிகளும் கடந்த 16 ஆண்டுகளாக நேருக்குநேர் சந்தித்ததில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டமொன்றின்போது பெரியதொரு கைகலப்பு ஏற்பட்டது.
விவகாரம் யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் அப்போதைய ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏற்பட்ட தொடர் நடவடிக்கைகளின் விளைவாக இரண்டு அணிகளும் நேருக்குநேர் சந்திக்க வேண்டிய ஆட்டங்களில் சுழற்சி முறையில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.
எனினும், எவ்.ஏ. கிண்ணத் தொடர் தவிர்க்க முடியாதது என்ற காரணத்தால் நேற்றுமுன்தினம் இண்டு அணிகளும் மோதியிருந்தன.